போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

பணியிடை நீக்கம் செய்ய உத்திரவிட வேண்டும்

 

மதுரை சேர்ந்த சாவித்திரி மற்றும் பலர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2012 ல் தாக்கல் செய்த மனு...,” மதுரை நிலையூர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா பெறுவதற்கு 20 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதிகாரிகள் விண்ணப்பத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் அடிப்படையில் உரிய நபர்களுக்கு விசாரணை செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பெயரில் 17 பேருக்கு உரிய முறையில் அரசு பொறம்போக்கு நிலத்தை சர்வே செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இலவச வீட்டு மனை பட்டா பெற்ற 17 பேரும் வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வந்த நிலையில், சிலர் வீடு கட்ட விடாமல் தடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், 17 பேருக்கு அரசு வழங்கிய இலவச பட்டா செல்லாது என அதிகாரிகள் கூறினர். இதனால் 17 குடும்பம் தற்போது வீடு இல்லாமல் மிகுந்த மன வேதனையில் உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டாவில், போலி பட்டா வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் அல்லது பணியிடை நீக்கம் செய்ய உத்திரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். 

 


 

மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்

 

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை விசாரணையின் போது நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆஷா முன்பு விசாரணை வந்தது, அப்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.  மதுரை மாவட்ட ஆட்சியரிடம், போலி பட்டா வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.