சென்னையில் 2 அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையிலும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகா விஷ்ணுவுக்கு, சென்னை முதன்மை அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.


தனது பேச்சு திரிக்கப்பட்டதாகவும் முழு உரையைக் கேட்காமல் பொய் வழக்குப் பதிவு  செய்யப்பட்டதாகவும் மகா விஷ்ணு கூறி இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதம் கழித்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


சென்னை அசோக் நகர், சைதாப் பேட்டை அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறப்படும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவிகளிடம் பேசினார். மகா விஷ்ணு அரசுப் பள்ளிகளில் முந்தைய ஜென்மங்கள், பாவ, புண்ணியங்கள் பற்றிப் பேசிய கருத்துக்களும், அரசுப்பள்ளி ஆசிரியருடன் கருத்து மோதலில் ஈடுபட்டதும், மாற்றுத்திறனாளிகள் பற்றிய அவரது பேச்சும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரமானது, அவரே தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தது.


 விமான நிலையத்தில் வைத்து விசாரணை


இதையடுத்து, அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பலரும் புகார் அளித்தனர். தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவிடம், சென்னை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் மீது 5 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றக் காவலில் இருந்த மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. 


ஒரு மாதம் கழித்து ஜாமீன்


தொடர்ந்து தனது பேச்சு திரிக்கப்பட்டதாகவும் முழு உரையைக் கேட்காமல் பொய் வழக்குப் பதிவு  செய்யப்பட்டதாகவும் மகா விஷ்ணு வாதிட்டிருந்தார். தொடர்ந்து ஒரு மாதம் கழித்து தற்போது, மகா விஷ்ணுவுக்கு, சென்னை முதன்மை அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.