மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் 2-ஆவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தா இவருக்கு ஒரு ஆண் மற்றும் 5 பெண் பிள்ளைகள் என ஆறு பிள்ளைகளுடன் இருந்துவருகிறார். இவரது மகன் முருகானந்தம் அதே பகுதியில் வீட்டின் அருகிலயே முடி திருத்தம் செய்யும் தொழில் செய்கிறார். இந்நிலையில் வசந்தா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (எ) கோழிக்குமார் என்பவரிடம் வசந்தா தனது வீட்டை அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை முழுமையாக செலுத்தி விடுகிறேன் வீடு அடமான கடன் பத்திரத்தை ரத்து செய்து கொடுங்கள் என கோழி குமாரிடம் வசந்தா கேட்டுள்ளார். அதற்கு 15 லட்சம் ரூபாய் தருகிறேன் வீட்டை முழுவதுமாக கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து தனது வீட்டை எழுதிகேட்டு தன்னை தாக்கி மிரட்டியதாக கூறி ஜெய்ஹிந்த்புரம் குமார் (எ) கோழிக்குமார் மற்றும் கணேசன் (எ) வாய் கணேசன், முத்து (எ)) புரோக்கர் முத்து ஆகிய 3 பேர் மீதும் மே மாதம் 7ஆம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் வசந்தா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மூவர் மீதும் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
துணை மேயர் மீது வழக்குப் பதிவு
இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் மற்றும் புரோக்கர் முத்து ஆகியோர் நேரில் வந்து கோழிகுமாருக்கு ஆதரவாக பேசி வீட்டை கேட்டும், முந்தைய வழக்கில் சாட்சி சொல்ல கூடாது என கூறியும் தங்களை பொது இடத்தில் வைத்து கற்களால் தாக்க முயன்று, சாதிய ரீதியாக ஆபாசமாக பேசி மிரட்டி காவல்துறையினரை துப்பாக்கியால் சுடுங்கள் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மூதாட்டி வசந்தா மற்றும் அவரது மகன் முருகானந்தம் ஆகியோர் ஆகஸ்ட் 5ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
இந்நிலையில் இது புகார் மனு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், இது தொடர்பாக மதுரை மாவட்ட குற்றவியல் 4ஆவது நீதிமன்றத்தில் மூதாட்டியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி மூதாட்டியை தாக்கிய புகாரில் துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வசந்தா என்ற மூதாட்டியை தாக்கி சாதி ரீதியாக பேசி அவரது மகன் மீது எச்சிலை துப்பி சாட்சி சொல்ல கூடாது என மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன், குமார் (எ) கோழிகுமார், முத்துச்சாமி (எ) குட்டமுத்து மற்றும் முத்து ஆகிய 5 பேர் மீது BNS சட்டமான 189(2) சட்ட விரோதமான கும்பலில் உறுப்பினராக இருப்பது, 296(b) பொது இடத்தில் ஆபாச சொற்கள்பயன்படுத்தியது, 329(4) வீட்டினுள் அத்துமீறல் குற்றம் செய்தல், 115(2) தன்னிச்சையாக காயம் விளைவித்தல், 351(3) மரணம் விளைவிப்பதாக மிரட்டல் , பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 6 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.