திருவாவடுதுறை ஆதின சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில்அகற்ற இந்து அறநிலையத்துறை ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு தொண்டர்கள் சபை நிறுவுனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான பழமையான அருள்மிகு மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரம்மகத்தி தோசம் நிவர்த்தி பூஜை முக்கியமானது. இதற்காக பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோயில் கண்காணிப்பாளர் ரூ.2 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்.
திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு சொந்தமான பிற கோயில்களிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட காவல் ஆய்வாளரிடம் புகார் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் பலனில்லை.
திருவாவடுதுறை ஆதின மடம்:
ஆதீன மடத்துக்கு சொந்தமாக 28,504.33 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 222 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. காசிதர்மம் பகுதியில் மடத்துக்கு சொந்தமான 699 ஏக்கரில் 688 ஏக்கர் மட்டுமே மடத்தின் பெயரில் உள்ளது. மற்ற நிலங்கள் தனி நபர்கள் பெயரில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற 2021ல் நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நிதி முறைகேடு குறித்து விசாரிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கோயில் பூஜைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது புகார் எதுவும் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மடத்துக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சட்டப்படி அகற்ற வேண்டும். இந்த உத்தரவை 12 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்