'பச்சரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, பெருங்காயம், நூபுர கங்கை தீர்த்தம்' இதையெல்லாம் பக்குவமாய் கலந்து நெய்யில் சுட்டு எடுப்பது தான் சம்பா தோசை. பழனிக்கு எப்படி பஞ்சாமிருதமோ, திருப்பதிக்கு எப்படி லட்டோ அப்படி தான் அழகர்கோயிலுக்கு சம்பா தோசை. ஹோல் பேமிலிக்கு ஒரு தோசை வாங்கினா போதும், பிரசாதம் சாப்ட்ட திருப்தி கிடைச்சிரும். அழகருக்கு அக்கார அடிசலும், இந்த சம்பா தோசையும் ரொம்பவும் பிடிக்கும். இதனால  மடப்பள்ளியில் சுந்தர் ராஜ பெருமாளுக்கு நெய்வேத்தியம் மடப்பள்ளியில் சிறப்பா செய்யப்படும். அவருக்கு செய்யும் சம்பா தோசை மட்டும் கிட்டத்தட்ட 3 அரை கிலோக்கு மேல இருக்கும்னு சொல்லப்படுகிறது.



பெருமாளுக்கு பிடிச்ச சம்பா தோசை மக்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும் என அழகர்கோயில் நிர்வாகம் பிரசாத கூடத்தில் தனியாக செஞ்சு கோயில் வளாகத்திலேயே விற்பனை செய்றாங்க. கடந்தாண்டு மட்டும்  6 லட்சத்தி 25 ஆயிரம் சம்பா தோசைய கிட்டதட்ட 2 அரை கோடிக்கி விற்பனை செஞ்சுருக்காங்க. ஆனாலும் கடும் சிரமத்திற்கு இடையில்தான் பிரசாதங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசாத உணவுக் கூடத்தை 70 லட்சத்திற்கு புனரமைக்கப்பட்டு கூடுதலாக பிரசாதம் செஞ்சுகிட்டு வாராங்க. 2 அடுப்பு இருந்த இடத்தில் 5 அடுப்புகள் இருக்கு. மாவு அறவைக்கு முழுமையா இயந்திரங்கள்.



பிரசாத கூடத்தில் தோசையை தவிர தேன்குழல், அப்பம், லட்டு, புளியோதரை, சம்பா தோசை, அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்களும் செய்யப்படுகிறது. எல்லாம் 10 ரூபாய்தான், சம்பா தோசை மட்டும் 40 ரூபாய். கோயில் உட்புரத்தில் ஸ்டால்கள் 3 எப்போதும் செயல்படும். திருவிழா காலத்தில் 1 ஸ்டால் எக்ஸ்ட்ரா செயல்படும்.  சம்பா தோசை பிரசாதம் மட்டுமில்ல அதற்கு பின்னாடி மிகப்பெரும் நம்பிக்கை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஊர் சண்டை, உறவுச் சண்டை, பங்காளி சண்டை, மாமன் மச்சான் சண்டை, நண்பர்களுக்கு இடையேயான சண்டை என எதுவாக இருந்தாலும் கருப்பணசாமி வாசலில் தீர்த்துக்கிறாங்க. மலை உச்சியில் இருக்கும் ராக்காயி அம்மனின் நூபுர கங்கையில் தீர்த்தம் ஆடிய பின் பெருமாளையும், கருப்பணசாமியையும் வேண்டிக்கிட்டு சம்பா தோசையை ஆளுக்கு கொஞ்சம் பிச்சு சாப்பிட்டா எந்த சண்டையும் இல்லாம சேர்ந்துக்கிடுறாங்க.



அதனால் சண்டையில் ஏசியது, பேசியது பலிச்சொல் என எதுவும் இல்லாம, காணாம போயிரும்னு நம்புராங்க. சம்பா தோசைக்கு தனி சுவை கோயில் தீர்த்தம்தான் என சமையலர்கள் சொல்றாங்க. ஆஹா, ஓ ஹோ சுவையாக இல்லாட்டியும் மிளகு, சீரகம், உளுந்து சுவையோட நெய் வாசனை தூக்கலா இருக்கும் சம்பா தோசை தனியான சுவை தான். அதனால கண்டிப்பா அழகர்கோயில் வந்தா சம்பா தோசை சுவைச்சு பார்க்கலாம்.



 

"ஆலயங்களில் கோயில் கொண்ட தெய்வங்களுக்கு அன்னம், அபூவம் என்ற இரண்டு விதமாக சமைத்த பதார்தங்கள் நைவேத்யம் செய்யப்படுகிறது

 

 அன்னம் - வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சாத வகைகள். 

 

 அபூவம் - தேன்குழல், அதிரசம், அப்பம், வடை, முறுக்கு போன்ற பதன வகைகள்.

 

நான்கு திசைகளிலும் யானை போன்று நின்று காத்து வருகின்ற வேங்கடவன், திருவரங்கள், சௌரிராஜன் போன்ற எம்பெருமாள்களுக்கு தலைவன் யானை, உலகமேத்தும் தென் யானையாகிய அழகர்யானை. எனவே எந்த திருக்கோயிலிலும் இல்லாத வகையில் அன்னங்களில் உயர்ந்ததாகிய பாயசான்னம் என்று சொல்லப்படுகிற அக்கார அடிசலும், அவங்களில் அளவிலும், சுவையிலும் உயர்ந்ததாகிய புஷ்டாபூபம் என்று சொல்லப்படுகிற தோசையும் அழகருக்கு மட்டுமே உரியதாகிறது" - என பூஜகர்கள்  தெரிவிக்கின்றனர்.



 

அதே போல் அழகர்கோயில் சுற்றுப்புற கிராம மக்களிடம் பேசினோம்...," வெளியூர் காரர்களுக்குதான் சம்பா தோசையை பலரும் கோயிலில் கொடுக்கும் உணவாக பார்க்கின்றனர். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் இதனை பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் சிறப்பு பிரசாதமாகதான் பார்ப்பார்கள். பல வருடமாக பிரச்னைகள் இருக்கும், அவர்கள் மன கசப்பு நீங்கி சேர வேண்டும் என்றால் உடனே சேர்ந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இவரும் பல்வேறு பேச்சுக்களை பேசி ஏசி இருப்பார்கள். கோயில்களில் காசு வெட்டிப் போடுதல், மிளகாய் அறைத்தல், காணிக்கை முடிந்து போடுதல் என செய்துருப்பார்கள் அப்படியாக செய்திருந்தால் இவர் குடும்பமும் ராசி ஆக வேண்டும். அதற்கு தீத்தத் தொட்டியில் நூபர கங்கை தீர்த்தம் தெளித்து அழகரையும், கருப்பணையும் வேண்டிக்கிட்டு சம்பா தோசையை பிட்டு சாப்பிடுவார்கள். அப்போது அவர்களுக்குள் இருக்கும் எல்லா மனக் கசப்பும் தீர்ந்துவிடும். அதற்கு பின்புதான் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட கூட செல்வார்கள். அந்த அளவிற்கு சம்பா தோசையை மிக முக்கியமாக நினைக்கிறார்கள்" என்றார்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண