திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள புத்தாநத்தம் சேர்ந்த  முகமது ரசீத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் ”நாங்கள் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளேன். எங்கள் புத்தாநத்தம் சுன்னத்தவல் ஜமாத் பள்ளிவாசல் பல ஆண்டுகளாக உள்ளது. இந்தப்பள்ளிவாசலில் இப்பகுதியில் உள்ள  இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகின்றனர்.

 

அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு:

 

மேலும் பள்ளிவாசலுக்கு அருகில்  இறந்த இஸ்லாமியர்களின் உடலை புதைக்க கபுர்ஸ்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கும், சுன்னத்தவல் ஜமாத் பள்ளிவாசலுக்கும் இடையே வழிபாடு, இஸ்லாமிய விடயங்கள் கடைப்பிடிப்பதில் சில வேறுபாடுகள் இருப்பதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில் தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள்  உயிரிழந்தால் அவர்களுடைய உடலை  பொது மயானம் கபுர்ஸ்தானில்  இடத்தில் அடக்கம் செய்ய சுன்னத்தவல் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகம் அனுமதி மறுப்பதோடு, இடையூறு  பிரச்சனை செய்கின்றனர்.



 

இந்நிலையில்  எனது தந்தை சிக்கந்தர் பாஷா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரை பொதுமயானத்தில் அடக்கம் செய்ய முயன்ற போது சுன்னத்தவல் ஜமாத் அடக்கம் செய்ய விடாமல் பிரச்னை செய்கின்றனர். இருப்பினும் தவ்ஹீத் ஜமாத் நிலத்தில் தந்தையின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோதும் பிரச்னை செய்கின்றனர். எனவே எனது தந்தையின் உடலை எங்கள் தவ்ஹீத் முறையில் தொழுகை நடத்தி புத்தாநத்தம் ஜமாத்  பொதுமயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், இல்லாத பட்சத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

நீதிபதி உத்தரவு:

 

இந்த வழக்கை  அவசர வழக்காக  விசாரணை செய்த நீதிபதி புகழேந்தி,  இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் என்ன பிரச்சனை உள்ளது இதில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது இருதரப்பினரும் எந்த பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது என எச்சரித்த நீதிபதி புத்தாநத்தம் சுன்னத்துவல் ஜமாத்திற்கு சொந்தமான பொது மயானத்தில் தான்  அடக்கம் செய்ய வேண்டும் என  உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது இறந்தவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவையும் மீறி அடக்கம் செய்ய பல் வேறு இடையூறு ஏற்பட்டது என தெரிவிக்கபட்டது.



 

சுதந்திரம் அடைந்தும் பாகுபாடு:

 

இதனை பதிவு செய்த நீதிபதி, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு ஆகிவிட்டது ஆனால் இறந்தவர்களின் உடல்  அடக்கம் செய்வதில் பாகுபாடு காட்டுவது  வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு வகுப்பினரும் தனித்தனியாக மயானம் கேட்டபது ஏற்று கொள்ள முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதி இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் இந்த நீதிமன்றம் நியமனம் செய்கிறது.

 

மேலும் இந்த வழக்கில் வக்பு வாரிய செயலர் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அப்பகுதியில் வாழுகின்ற இஸ்லாமியர்களில் இறந்தவர்கள்  அனைவரையும் ஒரே பொது மயானத்தில் அடக்கம் செய்வது குறித்து மயானத்தை  மாவட்ட ஆட்சியரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து உள்ளாட்சி நிர்வாகமே ஏன் பராமரிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுகுறித்து வக்பு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18 தேதிக்கு ஒத்திவைத்தார்.