தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம்  இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை  நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், முன்னதாக வெளியான பாடல்கள், இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை முழு அளவில் திருப்திபடுத்தி விட்டது என்றே சொல்லலாம். ரஜினி கடைசியாக நடித்த அண்ணாத்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களை இப்படம் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சி பார்த்த ரஜினி பெரிய அளவில் மன மகிழ்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் தியேட்டர்களில் கொண்டாட்டம் பரவியது. இந்நிலையில் ஜெயிலர் படத்திற்கு தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்ததோடு அவர்களை ஷோவுக்கும் அழைத்து வந்துள்ளார் uno aqua நிறுவனர் முகமது ஈஷாக். மதுரையில் ரஜினி ரசிகர்களுக்கு தொப்பி மற்றும் இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

 





 

இதுகுறித்து யுனோ அக்வா நிறுவனர் முகமது ஈஷாக் திரை அரங்கு முன் கூறுகையில், "நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவரைப் போல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்துள்ளேன். அதனால் எனது ஊழியர்களை எப்போதும் நல்லபடியாக கவனித்துக் கொள்வேன். என்னுடைய தலைவன் ரஜினியின் பிறந்தநாள் அன்றும் அவரின் படம் வெளியாகும் போதும் எனது ஊழியர்களுடன் கொண்டாடுவேன். இந்த முறை ஜெயிலர் ரிலீசுக்கு  நிறுவனத்தின் வேலை செய்யும் அனைவருக்கும் விடுமுறை அளித்து சர்குலர் அனுப்பினேன். ஆனால் அந்த சர்குலர் இணையத்தில் பரவி மிகப்பெரும் வைரல் ஆகிவிட்டது. இன்று ஜெயிலர் படத்திற்கு என் ஊழியர்களுடன் திரைப்படம் பார்க்க வந்துள்ளேன். இது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.