சித்திரைத் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் நண்பனை கொலை செய்தவர்கள் ஜாமினில் கையெழுத்திட வந்தபோது கொலை செய்ய திட்டமிட்ட நண்பர்கள் 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சித்திரை திருவிழாவில் கொலை:

 

மதுரையில் கடந்த மே மாதம் நடைபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் போது இரண்டு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மே மாதம் 14-ம் தேதியன்று  தெற்குவாசல் காஜா தெரு. கிருதுமால் நதி பாலத்தின் அருகே மதுரை சோலையழகுபுரம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார்(19) என்பவரை வெட்டிப்படுகொலை செய்தனர். 

 

இந்த கொலை வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த மணிகண்டன், சரவணன். சதீஸ்குமார், லட்சுமணன், வினோத்குமார், தட்சணமூர்த்தி, மாயகிருஷ்ணன், மாதவன், ராமர், திருகருப்புபாலன், ரமேஷ், ரவிக்குமார், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த வழக்கில் மீதமுள்ள 7 பேர் பிணை பெற்று தெற்குவாசல் காவல் நிலையத்தில் தினசரி நிபந்தனை ஜாமினில் கையொப்பமிட்டு வருகின்றனர். 




 

பழிக்குப்பழி கொலை முயற்சி:

 

இந்நிலையில் ஜாமினில் கையெழுத்திட வந்த மதுரை கீரைத்துறை வேதபிள்ளை தெரு. பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை பழிக்கு பழியாக கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு கொலையான ஆனந்தகுமாரின் நண்பர்களான பெரிய எலி, மணிகண்டன், மாரிச்செல்வம், வினோத்மாறன், மதன்குமார், பிரகாஷ், சதிஷ். வினோத், தனுஷ், சரவணக்குமார் , ஆகாஷ். சபரி ஆகியோர்கள் ஒன்று கூடி தெற்குவாசல் என்.எம்.ஆர்., பாலம் அடியில் பதுங்கியிருந்துள்ளனர்.

 

இதனையடுத்து  காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் அங்கு நின்றிருந்த நபர்களை ஆயுதங்களுடன் கைது செய்தனர்.




குண்டாஸில் கைது:


அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றம் காவலில் அடைத்தனர். இதனிடையே ஆனந்த்குமார் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் , சரவணன் , சதீஸ்குமார், லெட்சுமணன், வினோத்குமார் , தட்சணாமூர்த்தி ஆகிய 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரையில் பழிக்குப் பழியாக கொலை செய்ய முயன்ற நபர்களை தடுத்து கைது செய்த காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் பாராட்டு தெரிவித்துள்ளார்.