நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், இப்படம் இன்று உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மோகன் லால், ஜாக்கி ஷ்ராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ் குமார், சுனில், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. பீஸ்ட் படத்துக்குப் பிறகு நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள், ஆரவாரங்களுக்கு மத்தியில் இன்று ஜெயிலர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், லண்டன் என தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள ரசிகர்கள் தமிழ்நாட்டைப் போலவே தாங்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மொழி, நாடு கடந்து சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பல ரசிகர்கள் வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்து படம் பார்த்து ரசிப்பதையும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஒவ்வொரு ரஜினி பட ரிலீசின்போதும் தனது மனைவியுடன் ஜப்பானில் இருந்து சென்னை வந்து தமிழ்நாட்டு ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் யசுதா ஹிடெடோஷி.
ஜப்பானின் ஒஸாகா நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவரான யசுதா, தனது மனைவியுடன் தற்போது ஜெயிலர் படம் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை கிளம்புவதற்கு முன் அவரை சந்தித்து தன் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் யசுதா.
இந்நிலையில் தன் வருகை பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் முன்னதாகப் பேசிய யசுதா, “ஜெயிலர் படம் பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து சென்னை வந்தேன். “இங்க நான் தான் கிங்கு... இங்க நான் வைப்பது தான் ரூல்ஸூ, ஹூக்கும்” என ரஜினி பாணியில் பேசினா. தொடர்ந்து பேசிய யசுதா, “முத்து படம் தான் என் முதல் படம். அடுத்து பாட்ஷா. பாட்ஷா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி” எனப் பதிவிட்டுள்ளார்.
முத்து படம் முதல் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக மாறிய யசுதா கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி பட ரிலீஸின் போது சென்னை வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
சென்ற முறை பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தைப் பார்ப்பதற்காக யசுதா சென்னை வந்திருந்தார். ஜப்பானின் ஒசாகா நகரில் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வரும் யசுதா, அப்பகுதி ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராகவும் உள்ளார்.
முதன்முறையாக பாபா படம் பார்க்க வந்த யசுதா, அன்று தொடங்கியே இந்திய ரஜினி ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் பரிட்சயமானவராக விளங்கி வருகிறார்.
“ஜப்பானில் மக்கள் அமைதியாக படம் பார்ப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ரஜினி படத்தின் முதல் காட்சி முதன்முறை பார்த்தபோது வியப்படைந்து விட்டேன். ரஜினியோடு தமிழில் பேச வேண்டும் என்பதற்காகவே தமிழ் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.