அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டாலேயே வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறோம் என்று ஹிஜாப் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மனுதாரர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.  


தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.




இந்த சூழலில் வழக்கு தொடுத்த உடுப்பியைச் சேர்ந்த 5 மாணவிகள், தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ’’எங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டாலேயே வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்தப் பிரச்சினை உள்ளூர் மட்டத்திலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது அரசியல் மற்றும் வகுப்புவாத அடையாளத்தைப் பெற்றுவிட்டது. 


உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால், நாங்கள் கல்லூரிப் படிப்பை நிறுத்தப்போவதில்லை. எங்களுக்கு ஹிஜாப் வேண்டும். ஜிஹாப் இல்லாமல் நாங்கள் கல்லூரி செல்ல மாட்டோம். 


குரானில் ஒரு பெண் தன்னுடைய தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குரானில் இல்லையென்றால் நாங்கள் ஹிஜாபை அணிய மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.


முன்னதாக, ஹிஜாப் குறித்து உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியையும் வாசிக்கலாம்: Hijab verdict: ஹிஜாப் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்..ஆனால் இதை செய்தால்.. எச்சரித்த கர்நாடக முதலமைச்சர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண