உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து மூன்று வாரங்கள் கழிந்துள்ளன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான  அப்பாவி மக்கள் இதுவரை போருக்குப் பலியாகியுள்ளனர். 


கடந்த பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தவுடன் உலகம் முழுவதும் எதிர்ப்பையும் கண்டனங்களையும் பெற்று வருகிறது ரஷ்யா. மேலும், ரஷ்யாவின் தெருக்களில் ரஷ்ய மக்கள் பலரும் தங்கள் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் உக்ரைன் அரசுப் படைகளால் ரஷ்யப் போர் விமானிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். ரஷ்யாவைச் சேர்ந்த இந்த விமானிகள் செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பிடிபட்ட விமானிகள் அனைவரும் கடந்த மார்ச் 13 அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும், உக்ரைன் மீதான அவரது படையெடுப்பையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். 



பிடிப்பட்ட விமானிகளுள் ஒருவரான கால்கின் செர்கி அலெக்சீவிச் பேசிய போது, `நான் எனக்காக மன்னிப்பு கேட்கிறேன். உக்ரைனின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு முதியவருக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் இந்த நிலங்களின் மீதான எங்கள் படையெடுப்புக்காக மன்னிப்பு கோருகிறேன். இந்தப் படையெடுப்பிற்காக நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் ராணுவப் படையினரிடம் ஒன்றைச் சொல்கிறேன்.. நம் தலைமை கோழைத்தனமாகவும், துரோகிகளாகவும் நடந்து கொண்டுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார். 


34 வயதான மற்றொரு ரஷ்ய விமானி ரோஷ்சின்ஸ்கி ரஷ்ய அதிபர் புடினிடம் உக்ரைனுக்கு ரஷ்ய வீரர்களை அனுப்புவதை நிறுத்துமாறு வேண்டியுள்ளார். தனது சக விமானிகளுடன் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தனது நாடான ரஷ்யா விரைவில் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் எனக் கூறியுள்ளார். `ரஷ்யப் படையின் அனைத்து பிரிவுகளும் உங்கள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என உங்களிடம் கூற விரும்புகிறேன். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தன்னுடைய போர் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். குண்டு வீச்சுகளை நிறுத்துவதோடு, உக்ரைனுக்கு ரஷ்ய ராணுவத்தை அனுப்பி அப்பாவிகளைக் கொல்வதையும், வான்வழித் தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார். 



உக்ரைனில் இருந்து தங்கள் குடும்பங்களிடம் பேசிய ரஷ்ய ராணுவ வீரர்கள் பலரும் தாங்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படுவதாகக் கூறியுள்ளனர். ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் கேமரா முன் மனமுடைந்து அழுததால், அங்கிருந்த உக்ரைன் மக்கள் அவர் தனது தாயிடம் பேசுவதற்கு உதவியும் செய்தனர். 


பெண்களையும் குழந்தைகளையும் ரஷ்யப் படையினர் சுட்டுக் கொல்வதாகவும், உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் இருந்த கிராமம் ஒன்றில் தப்பிச் சென்ற 7 அப்பாவி மக்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.