ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் 11 குழந்தைகள் பெற்றபிறகு, குடும்ப கட்டுப்பாடு செய்ததால் அவரது கணவர் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் கியோஞ்சரின் டெல்கோய் தொகுதிக்கு உட்பட்ட திமிரியா கிராமத்தில் நடந்துள்ளது. 


திமிரியா கிராமத்தை சேர்ந்தவர்கள் ரபி- ஜானகி. இந்த தம்பதி திருமணமான 11 ஆண்டுகளில் 11 குழந்தைகளை பெற்றுள்ளனர். ஆண்டுக்கு ஒரு குழந்தையென மொத்தம் 11 குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு குழந்தை மட்டும் உடல்நிலை சரியில்லாமல் பிறந்துள்ளது. தற்போது, 10 குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். 


இந்தநிலையில், கடந்த சில நாட்களாக ஜானகியின் உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதையடுத்து ஜானகி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரை பரிசோதித்த சுகாதார அதிகாரியான ஆஷா என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் குழந்தை பிறப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து ஜானகியிடம் தெரிவித்துள்ளார். பணியாளர்கள் சொன்ன தகவலை ஏற்றுகொண்ட ஜானகி குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். 


தன் மனைவி குடும்ப கட்டுப்பாட்டு செய்துகொண்டதை அறிந்துகொண்ட ரபி, தனது மனைவி அறுவை சிகிச்சை செய்த பிறகு புனிதமற்றவராகிவிட்டதாக கூறி அடித்து விரட்டியடித்துள்ளார். இப்போது ஜானகி மரத்தடியில் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜானகி தெரிவிக்கையில், “முதல் குழந்தை பிரசவத்தின்போது இறந்த பிறகு எனக்கு இப்போது 10 குழந்தைகள் உள்ளனர். என் குழந்தைகள் வளர்ந்து விட்டதால், ஒவ்வொரு வருடமும் கர்ப்பமாக இருப்பது எனக்கு சங்கடமாக இருந்தது. மற்ற ஒவ்வொரு பெண்ணும் கருத்தடைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல, ஆனால் என் கணவருக்குப் புரியவில்லை” என்றார். 


தொடர்ந்து திமிரியா கிராமத்தைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் தெரிவிக்கையில், “ஒவ்வொரு பிரசவத்துக்குப் பிறகும் ஜானகியின் உடல்நிலை மோசமாகி வருவதை நான் கவனித்து வருகிறேன். அவள் பலவீனமாகிவிட்டாள், மேலும் கர்ப்பத்தைத் தாங்க முடியாது. அதுமட்டுமல்லாமல், அவளால் எல்லா குழந்தைகளுக்கும் உணவு கூட கொடுக்க முடியாது. இதனால் நான் ஜானகியை அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்தினேன். இதற்கு ஜானகியும் ஒப்புக்கொண்டாள். ஆனால், இதைக் கேட்டதும் அவரது கணவர் வளை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ரபிக்கு அவளின் நிலைமையை புரிய வைக்க நான் முயற்சித்தேன், ஆனால் அவன் பிடிவாதமாக இருக்கிறார்.  நான் அவன் அருகில் சென்றால் என்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறான்” என்று தெரிவித்தார். 


தற்போது சுகாதார ஊழியர்கள் ரபியிடம் பேசி, அவரது மனைவியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.