தஞ்சாவூா்: பழைய ஓய்வூதிய  திட்டத்தை உடனே அமல்படுத்த வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் வரும் மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது. அதில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திரளானோர் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூரில் ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம், பி.இளையராஜா, இ.சத்தியசீலன், ஏ.ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநிலப் பொதுச்செயலாளர் அ.மலர்விழி சிறப்புரையாற்றினார். மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடன் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு வழங்கி உள்ளவாறு 1-7-2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் மார்ச் 5-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டமும், தொடர்ந்து மார்ச் 24ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டமும் நடத்துவது. இதில் திரளான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர் நல சங்கம் மாநில பொதுச்செயலாளர் எம்.கண்ணையன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயலாளர் என்.கிட்டு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஏ.எழிலரசன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர் டி.ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் டி.இளங்கோவன்,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் மாநில செயலாளர் கே.பாஸ்கரன், அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் தரும.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு நிலையான மாத வருமானத்தை உறுதியளிக்கிறது. கடைசியாக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்கியது. ஊழியர்களுக்கு எந்த வரிச் சலுகைகளும் பொருந்தாது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருமான வரி விதிக்கப்படாது. ஓய்வு பெற்ற பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற அரசு ஊழியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். இதை மாற்றி புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.