முஸ்லீம் தனிநபர் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர் பெண், தனது பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்ளலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 18 வயதுக்குக் குறைவானவராக இருந்தாலும், கணவருடன் இணைந்து வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.






தங்களை யாரும் பிரிக்க கூடாது என்பதை உறுதி செய்ய கோரி தம்பதியினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஜஸ்மீத் சிங் விசாரித்து, சட்டத்தின்படி தம்பதியருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.


சிறுமியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இந்திய தண்டனை சட்டம் (கடத்தல்) பிரிவு 363 இன் கீழ் கணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், இந்திய தண்டனை சட்டம் (பாலியல் வன்கொடுமை) பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 ஆகியவற்றின் கீழும் சிறுமியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர்.


சிறுமி, தனது பெற்றோரால் தொடர்ந்து அடிக்கப்படுவதாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.


அரசு தாக்கல் செய்த வழக்கின் நிலை அறிக்கையில் அவரது பிறந்த தேதி ஆகஸ்ட் 2, 2006 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர் திருமணம் செய்துகொண்ட போது அவருக்கு 15 வயது.


இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) விண்ணப்பச் சட்டம், 1937 ஆல் நிர்வகிக்கப்படுகிறார்கள். திருமணம், வாரிசு, வாரிசுரிமை மற்றும் தொண்டு ஆகிய விவகாரங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகிறது.


முஸ்லீம் பெண்கள் விவாகரத்து மற்றும் கணவரால் விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பெறுவதற்கான சூழ்நிலைகள் மற்றும் தொடர்புடைய விஷயங்கள் முஸ்லீம் திருமண கலைத்தல் சட்டம், 1939இன் கீழ் வருகிறது.


இந்தச் சட்டங்கள் கோவா மாநிலத்தில் பொருந்தாது. அங்கு கோவா சிவில் சட்டம், மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். சிறப்புத் திருமணச் சட்டம், 1954ன் கீழ் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டங்கள் பொருந்தாது.