தமிழகத்தின் கடைசி 38வது மாவட்டமாக மயிலாடுதுறையை கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து 120 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் கட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 04, 2024 அன்று புதிம மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு அங்கு செயல்பட தொடங்கியது.

வேலைவாய்ப்பு மோசடி புகார் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வேலைவாய்ப்பு மோசடி கும்பல்கள் தங்களின் இலக்காக மாற்றியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் காலியாக உள்ளதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி, போலியான நியமன ஆணைகளை விநியோகித்து பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல்கள் நடமாடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டம் உதயமாகி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04.08.2024 ஆம் தேதி முதல் இயங்கி வருகின்றது. இந்நேர்வில் புதிய மாவட்ட ஆட்சியரகத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அரசுப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக தெரிவித்தும், அலுவலக உதவியாளர்/ இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை விநியோகம் செய்தும், மோசடிகள் நடைபெறுவதாக மாவட்ட நிருவாகத்திற்கு ஏராளமான புகார் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

எனவே பொதுமக்கள் இது போன்ற மோசடிகளை நம்பி பணத்தை மோசடியாளர்களிடம் அளிக்க வேண்டாம் எனவும், மேற்படி அரசுப் பணிக்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக செய்தித்தாளில் விளம்பரம் செய்து அதன் மூலமாக மட்டுமே அரசுப்பணி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்து, யாரேனும் அணுகினால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் கருத்து 

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டம், மக்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றி, ஆகஸ்ட் 4, 2024 அன்று தனது புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. புதிய ஆட்சியர் அலுவலகம் அமைந்த சில மாதங்களிலேயே, இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. 

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சில மோசடி கும்பல்கள், அப்பாவி மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுக்கென செல்வாக்கு இருப்பதாகவும், அதிகாரிகள் மட்டத்தில் தங்களுக்குப் பழக்கம் இருப்பதாகவும் கூறி, வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து வருகின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களைப் போல வேடமிட்டு, பொதுமக்களை அணுகி, 'வேலை வாய்ப்பு' என்ற பெயரில் பணத்தை ஏமாற்றி வாங்கிக் கொள்வவதாகவும் தெரியவருகிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கும் என்ற ஆவலில், வட்டிக்கு கடன் வாங்கி அல்லது தங்கள் சேமிப்பை இழந்து இந்த மோசடி கும்பல்களிடம் பணத்தை இழந்துள்ளனர். போலி நியமன ஆணைகளைப் பெற்றுக்கொண்ட பிறகுதான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பலர் மாவட்ட நிர்வாகத்தை அணுகி புகார் அளித்து வருகின்றனர். இந்த மோசடி கும்பலை காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்து மேலும் அப்பாவி மக்கள் ஏமாறாமல் தடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.