Weather Update: தமிழ்நாட்டில் கோடை காலத்திலே பரவலாக மழை பெய்து வந்த நிலையில், ஜுன் மாதம் முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில், இன்றும் பல இடங்களில் மழையின் தாக்கம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரம்:

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரம் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

கோவையில் கொட்டப்போகும் கனமழை:

தென்மேற்கு பருவமழைக்காலம் என்றாலே தமிழ்நாட்டின் ஓரளவு மழை பெய்யும். நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகளவு தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டில் வரும் 6 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

ஆரஞ்ச் அலர்ட்:

13ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 14, 15 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. கோவை மட்டுமின்றி 15ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைநகரான சென்னையைப் பொறுத்தமட்டில் வானம் அடுத்த இரு தினங்களுக்கு மேகமூட்டத்துடனே காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்ற மதியம் வரை நல்ல வெயில் காணப்பட்ட நிலையில், மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது.