பாட்டாளி மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடுள்ள அறிக்கையில்.,

பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த  வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. 

பொதுக்குழு கூட்டங்கள் விவரம்

1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்

2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்

3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்

4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்

5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்

6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்

7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்

8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்

9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்

10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி  மாவட்டம்

மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சியின்  மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து முரண்பாடு நிலவிவரும் நிலையில் கட்சியில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை மருத்துவர் ராமதாஸ் நியமித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி தைலாபுரம் இல்லத்திற்கு வந்த அன்புமணி, மருத்துவர் ராமதாசை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து 10 மணிக்கு தைலாபுரம் இல்லத்திற்கு வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் 3 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர் ராமதாசுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏழாம் தேதி திடீரென சென்னை புறப்பட்டு சென்ற மருத்துவர் ராமதாஸ் அங்கு குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று(09-06-25) தேதி தைலாபுரம் இல்லம் திரும்பிய மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து கட்சியில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
ஏற்கனவே பொருளாளர் திலகபாமாவை நீக்கி சையத் மன்சூர் உசேனை நியமித்துள்ளார். மேலும் 37 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தைலாபுரம் இல்லத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவுள்ளவர்கள் வருகைதந்துள்ளனர். பாமகவில் நிர்வாகிகள் மாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பா.ம.க. ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் நடைபெறும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.