பெண் ஒருவர் சாலையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்படும் வீடியோவை இத்தாலியில் முக்கிய அரசியல் தலைவர் ஜியோர்ஜியா மெலோனி பகிர்ந்த நிலையில், ட்விட்டர் தளம் வீடியோவை நீக்கியுள்ளது.
இத்தாலிய நகரத்தில் குடியேறிய உக்ரேனிய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை
அந்நாட்டின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் முன்னணி வகிக்கும் தீவிர வலதுசாரித் தலைவர் ஜியோர்ஜியா மெலோனி முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
’ப்ரதர்ஸ் ஆஃப் இத்தாலி’ கட்சியைச் சேர்ந்த மெலோனியின் வீடியோவை தாமாக முன்வந்து முன்னதாக ட்விட்டர் நீக்கியுள்ள சம்பவம் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் (ஆக.21) எடிட் செய்யப்பட்ட மங்கலான வீடியோவை மெலோனி ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து ” பாலியல் வன்முறையின் இத்தகைய கொடூரமான அத்தியாயத்தை எதிர்கொள்ளும் போது அமைதியாக இருக்க முடியாது” எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுமதியின்றி மெலோனி இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்கு அவரது அரசியல் போட்டியாளர்கள் மற்றும் இத்தாலி நாட்டின் மனித உரிமை ஆர்வலர்கள் முன்னதாக கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த வீடியோவை வெளியிட்டு மெலோனி பாதிக்கப்பட்டவரின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஆக.23) காலை மெலோனியின் இப்பதிவை ட்விட்டர் அகற்றியதோடு, இந்த ட்வீட் ட்விட்டர் விதிகளை மீறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த சர்ச்சை குறித்து மீண்டும் பதிவிட்டிருந்த மெலோனி பாதிக்கப்பட்டவருக்கான ஆதரவை வெளிப்படுத்தவும், நடந்ததைக் கண்டிக்கவும், வெளிப்படையாக நீதியைக் கோரவும் தான் இந்த வீடியோவை தான் வெளியிட்டதாகத் தெரிவித்திருந்தார்
55 வயதான உக்ரேனியப் பெண் ஒருவர், கினியாவைச் சேர்ந்த புகலிடம் தேடி வந்த நபர் ஒருவரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபாதையில் தாக்கப்பட்டதாக இச்சம்பவம் குறித்து பியாசென்சா நகரத்தின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த காவல் துறையினர், விசாரணை தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவாறு தனது குடியிருப்பில் இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து ஆன்லைனில் வெளியிடப்பட்ட காட்சி மங்கலாக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காண முடியவில்லை எனினும் அப்பெண்ணின் அழுகுரல் ஆடியோவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தில் எப்படி வெளியானது என்பது குறித்து விசாரித்து வருவதாக இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”இது போன்ற குற்றங்கள் நிகழ்வதை பதிவு செய்து வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்புவது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகிறது" என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.