சாலையில் இறந்து கிடந்த மாஜி பஞ்சாயத்து தலைவர் - அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சந்தேகம் என மனைவி பரபரப்பு புகார்
மர்மமாக சாலையில் இறந்து கிடந்த மாஜி பஞ்சாயத்து தலைவர்-அதிமுக முன்னாள் அமைச்சர் மீது சந்தேகம்-மனைவி பரபரப்பு புகார்.
தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த மாஜி பஞ்சாயத்து தலைவரின் மனைவி தனது கணவர் சாவில் அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் பகுதி சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(41), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். இவரது மனைவி கவிதா 34 இவர்களுக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி காரியமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி காமராஜ் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது சொந்த வேலை காரணமாக வெளியே செல்வதாக கூறிவிட்டு, டூவீலரில் சென்றுள்ளார். அப்போது தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பூலாபட்டி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவர். இவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக தர்மபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் மீது, முதன் முதலில் சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துள்ளார் என கூறுவது, விபத்து தானா அல்லது யாரேனும் கொலை செய்யும் நோக்கில் அவர் மீது வாகனத்தை மோதி விபத்து போல் நாடகமாடியுள்ளனரா என்ற கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா காரிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் இறப்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடமான தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பூலாப்பட்டி மேம்பாலம் அருகே கிருஷ்ணமூர்த்தி மீது வாகன மோதிய இடத்தில் ஆய்வு செய்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.
மாஜி பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பில் அதிமுக மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் இருக்கலாம் என அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.