Past Lives Review: காலங்கள் இடையே நடக்கும் காதல் போராட்டம்.. ‘Past Lives’ திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ..!
Past Lives Movie Review: கொரியாவை சேர்ந்த அமெரிக்க நாடக எழுத்தாளரான செலின் சாங்கின் முதல் முழு நீள திரைப்படமான பாஸ்ட் லைவ்ஸ் எப்படி இருக்கிறது?மக்களின் மனங்களை வென்றதா பாஸ்ட் லைவ்ஸ்? விமர்சனம் இதோ..!
![Korean american romantic drama past lives movie review in tamil Past Lives Review: காலங்கள் இடையே நடக்கும் காதல் போராட்டம்.. ‘Past Lives’ திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/e183783cc56755f75d80f57b3d149dca1689144252232501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
செலின் சாங்
டீயோ யூ, க்ரிடா லீ மற்றும் ஜான் மகரோ
கொரியாவை சேர்ந்த அமெரிக்க நாடக எழுத்தாளரான செலின் சாங் இயக்கத்தில் க்ரிடா லீ, டீயோ யூ மற்றும் ஜான் மகரோ நடித்துள்ள திரைப்படம் ‘பாஸ்ட் லைவ்ஸ்’.
கதைக்கரு:
பள்ளி பருவத்தில் ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்புடைய குழந்தைகள் இருவர், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக வெவ்வேறு நாடுகளுக்கு பிரிந்துவிடுகிறார்கள். பிரிந்த இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? மாறாதது எவை? என்பதே பாஸ்ட் லைவ்ஸ் திரைப்படம்.
நா யங் (டீயோ யூ ) மற்றும் ஹே சங் (க்ரிடா லீ) இருவரும் ஒரே வகுப்பில் படித்து வரும் குழந்தைகள். சிறு வயதிலேயே இவர்கள் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஒரு விதமான ஈர்ப்பு இருந்து வருகிறது.இந்நிலையில் ஹே சங்கின் குடும்பம் கொரியாவிலிருந்து கனடாவிற்கு குடிப்பெயர்கிறது. இதனால் நா யங் மற்றும் ஹே சங் இருவரும் மிகவும் மனமுடைந்தாலும் நாட்கள் செல்ல இருவரும் தங்கள் வாழ்கையில் கவனம் செலுத்த தொடங்கிவிடுகின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு நோரா என்று பெயர் மாற்றி கொண்ட ஹே சங்கிற்கு திடீரென அவரது பள்ளி பருவ க்ரஷ் நினைவுக்கு வர அவரை சமூகவலைதலங்களில் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார். அந்த முயற்சி வெற்றியில் முடிய இருவரும் ஸ்கைப்பில் மீண்டும் பழகி வருகின்றனர். திடீரென்று ஒருநாள் நோரா தனது பணியில் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறி நா யங்குடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார். மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர் .
அந்த கால இடைவெளியில் எழுத்தாளரான நோரா மற்றொரு அமெரிக்க எழுத்தாளரான ஆர்தரை (ஜான் மகரோ) திருமணம் செய்து கொள்கிறார். நா யங்கும் வேறொரு சீன பெண்ணை காதலிக்க தொடங்கிவிட்டார். பின்னொரு நாளில் நியூயார்கில் சந்திக்கும் நோரா மற்றும் நா யங்கும் சேர்கிறார்களா? ஹே சங் மற்றும் ஆர்தரின் திருமண உறவிற்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்பதே திரைப்படம்.
நடிகர்களின் நடிப்பு எப்படி?
இப்படத்தின் நடிகர்களான டீயோ யூ, க்ரிடா லீ மற்றும் ஜான் மகரோ என அனைவரும் இயல்பான நடிப்பை வெளிபடுத்தி ஈர்க்கின்றனர். குறிப்பாக கொரிய-அமெரிக்கரான க்ரிடா லீ மற்றும் முழுக்க முழுக்க கொரிய ஆணான டியோ யூ ஆகிய இருவரும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்திருக்கின்றனர்.மேலும் திரையில் அவ்வளவு நேரம் பயணிக்கவில்லை என்றாலும் கூட நல்ல புரிதல் உடைய கணவர் கதாபாத்திரத்தில் நடித்து மனங்களை கவர்கிறார் ஜான் மகரோ.
நிறை, குறைகள்:
உணர்ச்சி மிகுந்த வசனங்கள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் வயதிற்கு ஏற்றார் போல் மாறும் நடிகர்களின் தோற்றம் இயல்பாக அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. குறை என்று பார்க்கையில் படத்தின் திரைக்கதை சற்று மெதுவாக இருந்தது அவ்வப்போது கொட்டாவி வர வைத்தது.
இந்த திரைப்படம் யின்யுன் என்ற கொரிய வார்த்தையை மையமாக கொண்டு எடுக்கப்படுள்ளது. இரு மனிதர்கள் கடக்கும் பொழுது அவர்கள் சட்டை உரசிக்கொள்கிறது என்றால் அவர்களுக்கு இடையே ஒரு லேயர் யின்யுன் உருவாகும்; இப்படி வெவ்வேறு பிறவிகளில் எந்த இருவருக்கு இடையே 8000 யின்யுன் எற்படுகிறதோ அவர்கள் தான் சோல் மேட்ஸ் என்று கூறப்பட்டிருக்கும். இவ்வாறு கொரியன் வாசனை மாறாமல் எடுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க திரைப்படமான ’பாஸ்ட் லைவ்ஸ்’, காதல் திரைப்படப் பிரியர்களுக்கு நல்ல ஒரு உணர்ச்சிகரமான விருந்தாகவே இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)