அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை சேர்ந்த வேம்பு சகோதரர்களால் தொடங்கப்பட்ட ஜோஹோ மென்பொருள் நிறுவனம் இன்று கொடிகட்டிப் பறந்து வருகிறது. பல முன்னணி மென்பொருள் நிறுவனங்களை விட தரமான அதிக வசதிகள் கொண்ட சாப்ட்வேர்களை மலிவான விலையில் ஜோஹோ நிறுவனம் வழங்கிவருகிறது. இதன் காரணமாகவே ஜோஹோ நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் குவிகின்றனர்.
ஸ்ரீதர் வேம்பு தனது சகோதரருடன் சேர்ந்து 1996 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்குகிறது. போர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் உலக பணக்காரர்களின் பட்டியலில் வேம்பு சகோதரர்களின் சொத்துமதிப்பு மட்டும் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் கடந்த ஆண்டே பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்கள் கையில் லேப்டாப்பை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அதில் ஜோஹோவும் விதிவிலக்கு அல்ல. ஆனால், ஒரு சின்ன மாற்றம். ஊழியர்களுடன் சேர்ந்த ஜோஹோ சி.இ.ஒ. ஸ்ரீதர் வேம்பும் லேப்டாப்புடன் ஊருக்கு கிளம்பிவிட்டார்.
தென்காசி அருகே இயற்கை எழில்மிகுந்த சிறிய கிராமம் ஒன்றில் லேப்டாப்புடன் பணியை கவனித்து வந்தார் ஸ்ரீதர் வேம்பு. அத்துடன் அருகில் உள்ள இயற்கை தளங்களை ரசிப்பது, சைக்கிள் ஓட்டுவது என இயற்கையோடு காலத்தை செலவழித்து வருகிறார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு வீடு தோறும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் ஸ்ரீதர் வேம்பு. ”குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் என்னுடைய சொந்த ஊரில் தொடங்கி உள்ளது. தற்போது எங்கள் கிராமத்தில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் இணைப்பு கிடைத்து உள்ளது. நம்முடைய ஜனநாயக அமைப்பு தாமதமானது என்றாலும் பணிகளைக் கட்டாயம் முடித்துவிடும்” என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு பதிலளித்த சந்திரசேகர் என்ற நபர், “இது ஸ்லோ இல்ல, ரொம்பவே ஸ்லோ.. பல தலைமுறைகளாக இந்த அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சரியான திட்டமிடல் மூலம் இவை அனைத்தையும் கட்டாயம் வழங்கி இருக்க முடியும் என நான் நம்புகிறேன். இவர்கள் சரியாக பணியாற்றாமல் இருப்பதற்கு ஜனநாயகத்தைக் குறை சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரசேகரின் பதிலுக்கு ஸ்ரீதர் வேம்பு அளித்த விளக்கத்தில், “ஜனநாயகத்தில் சுயாட்சி மிகவும் முக்கியமான ஒன்று, இதை மேம்படுத்தக் காலம் ஆகும். இங்கு நெடுஞ்சாலை வசதிகள் சிறப்பாக உள்ளன. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் அருமையாக இருக்கின்றன. இன்னும் பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.” என்றார்.
மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு...
Flashback: யானை கேட்ட ரவிக்குமார்... குதிரை தந்த செளத்ரி... காஸ்ட்லி கவுண்டமணி... இது நாட்டாமை கதை!
‛என்னை வெச்சு செஞ்சுட்டாங்க... இனி அந்த பக்கமே வர மாட்டேன்’ கண்ணீருடன் விடைபெற்ற சூர்யா தேவி!