காது குத்து, கல்யாணம், கிடாவெட்டு, ஊர் திருவிழா, இறுதிச்சடங்கு என எந்த விழாவாக இருந்தாலும் மது என்பது தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டது. சமூகத்தில் தினமும் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எந்த வகையான குற்றத்திலும் மதுவின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என நீதிபதிகள் கூறியுள்ளது அந்த வழக்கை அனைவராலும் உற்றுநோக்க வைத்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில், வாய் தகராறு ஏற்படவே பீர் பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக காவல்துறையினரால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பொய்யாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. கணக்கு காண்பிக்கும் நோக்கில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மது அருந்தியதன் காரணமாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர்கள் இருவரும் இனிமேல் குடிக்க மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால், ஜாமீன் வழங்குவதாக கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
இது குறித்து நம்மிடம் மனநல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ செளந்திர பாண்டியன், மது உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் காரணமாகவே பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. நண்பர்களுக்கு இடையேயான, சண்டைகள் கூட ஏற்படுகிறது. மது குடித்தால் தைரியம் ஏற்படும் என்பது தவறான தவவல். மது குடித்தால் சுய சிந்தனையை இழக்க செய்த எந்த அளவிற்கு செய்யத்தூண்டும். அதனால் அவ்வாறு மது பயன்படுத்துகின்றனர். இவை பல நேரங்களில் தவறான முடிவையே எடுக்க வைக்கிறது” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !