நட்சத்திர பட்டாளங்கள் அணிவகுப்பும் போது, அவர்களுக்கு ஏற்ற தீனி வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கும். இரண்டரை மணி நேரத்தில் அத்தனை பேருக்கும் முக்கியத்துவம் கிடைத்துவிடுமா என்றால் அது சந்தேகம். ஆனால், ஒரு படத்தில் நடித்த அத்தனை நட்சத்திர பட்டாளத்திற்கும், அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரம் கொடுத்து, முக்கியத்துவமும் கொடுத்து எடுக்கப்பட்ட, சூப்பர் டூப்பர் ஹிட் படம் நாட்டாமை. இன்றும் வாரத்திற்கு ஒரு நாள் நாட்டாமை இல்லாத சின்னத்திரையை பார்க்க முடியாது. ஆண்டுகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் நாட்டாமை திரைப்படம் உருவானதில் பல சுவாரஸ்யங்கள் உள்ளது. அவற்றை இந்த ப்ளாஷ்பேக் பகுதியில் காணலாம். 




10வது படம்... பக்கா படம்!


கமர்ஷியல் இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், தனது 10வது படமாக நாட்டாமையை இயக்க முடிவு செய்கிறார். நல்ல கதை அமைந்துவிட்டது. இப்போது நல்ல தயாரிப்பாளர் வேண்டும். குடும்பப் படங்களுக்கு சூப்பர் குட் பிலிம்ஸ் தான் அப்போதைக்கு அனைவரின் சாய்ஸ். ஆர்.பி.சவுத்ரி ‛ஓகே’ சொல்ல நாட்டாமை ரெடி. ஏற்கனவே சரத்குமார் கால்ஷீட் இருந்ததால் சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தை தயாரிக்க , கே.எஸ்.ரவிக்குமார் இயக்க நேரம் கூடி வந்தது. ஆனால் அது சரத்குமாருடன் நின்று விடவில்லை. ஒரு பெரிய நடிகர் பட்டாளமே அதன் பின் நடிக்க தயாராக இருந்தது. அது தான் நாட்டாமை  படத்தின் பலமும் கூட.




சரத்குமாருக்கு இணையாக கவுண்டமணி சம்பளம்!


சரத்குமார், கவுண்டமணி, குஷ்பூ, மீனா, விஜயகுமார், மனோரமா, சங்கவி, பொன்னம்பலம், செந்தில், வைஷ்ணவி என எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் படத்தில் வருகிறார்கள். படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா... வெறும் ரூ.50 லட்சம். இன்று எடுக்கப்படும் படங்களுக்கான பப்ளிசிட்டி செலவே கோடிகளை தாண்டும். அந்த 50 லட்சத்தில் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சம்பளம் தலா ரூ.5 லட்சம். அதாவது அவர்கள் மூன்று பேருக்கு மட்டும் ரூ.15 லட்சம் போனால், எஞ்சியிருக்கும் 35 லட்சம் ரூபாயில் குஷ்பூ, மீனா, விஜயகுமார், மனோரமா, சங்கவி, பொன்னம்பலம், செந்தில் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, படத்திற்கான செலவையும் அதில் முடித்திருக்கிறார்கள். மிகக்குறைந்த செலவில் திட்டமிட்டு எடுக்கப்பட்டு, அதிக லாபம் ஈட்டிய படம், நாட்டாமை.




லட்சுமி வாய்ப்பு குஷ்பூக்கு மாறிய ட்விஸ்ட்!


சரத்குமார் இரட்டை வேடம். ஒருவருக்கு மீனா. இளமையான சரத்குமார் என்பதால் அதில் பிரச்சினை இல்லை. இன்னொரு சரத்குமார் கொஞ்சம் முதுமையானவர். அவருக்கு லட்சுமியை போடலாம் என்பது தான் திட்டம். அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்திருந்தது. லட்சுமியை சந்திக்க காரில் புறப்படுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். செல்லும் வழியில் ஒரு ஷூட்டிங் நடக்கிறது. அந்த இயக்குனரை சந்தித்துவிட்டு போகலாம் என காரில் இருந்து இறங்குகிறார் ரவிக்குமார். ஹூரோயின் குஷ்பூ. ஏற்கனவே ரவிக்குமாருக்கு அறிமுகமானவர். இயக்குனரிடம் பேசிவிட்டு, குஷ்பூவிடம் நலம் விசாரிக்கிறார் ரவிக்குமார். என்ன படம் போகிறது என கேட்கிறார் குஷ்பூ. நாட்டாமை விபரங்களை கூறுகிறார் ரவிக்குமார். யாரெல்லாம் புக் ஆகியுள்ளனர் என்றும் தெரிவிக்கிறார். இப்போது எங்கு செல்கிறீர்கள் என குஷ்பூ கேட்க, லட்சுமியை சந்திக்க செல்லும் விசயத்தை கூறுகிறார் ரவிக்குமார். ‛ஏன் நான் அந்த கேரக்டரில் நடிக்க கூடாதா..’ என , குஷ்பூ கேட்க, ரவிக்குமாருக்கு ஷாக். அப்போது குஷ்பூ, வேறு லெவலில் இருக்கும் நடிகை. வயதான கேரக்டர் அவருக்கு எப்படி சரியாக இருக்கும் என்கிற டவுட் அது. ஆனால் குஷ்பூ, நான் அதை சவாலாக எடுத்து செய்கிறேன் என்கிறார். ‛சரி இருங்க... நான் சொல்றேன்...’ என அங்கிருந்து கிளம்புகிறார் ரவிக்குமார்.




குஷ்பூ வந்ததால் மாற்றப்பட்ட திரைக்கதை!


நேராய் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியை சந்தித்தார் ரவிக்குமார். விசயத்தை கூறுகிறார். ‛குஷ்பூவா...’ என, ஷாக் ஆகிறார் செளத்ரி. ‛நல்லா தான்யா இருக்கும்... ஆனால் அந்த கதையில் அந்த கேரக்டருக்கு பெருசா எதுவும் இல்லையே...’ என அவர் சொல்ல, ‛நான் அதை மாற்றிவிடுகிறேன்...’ என ரவிக்குமார் கூற, ஓகே சொன்னார் தயாரிப்பாளர். அதன் பிறகு தான் திரைக்கதையில் மாற்றம் செய்து, ஒரு பிளாஷ்பேக் வைத்து அதில் சரத்குமார்-குஷ்பூ காட்சிகள் வருவது போலவும், அவர்களுக்கு ஒரு பாட்டு வருவதாக திரைக்கதை மாற்றப்பட்டது. அந்த மாற்றப்பட்ட திரைக்கதை படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் சேர்த்தது. படத்தை இன்னும் வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றது. குஷ்பூ வந்ததால், அந்த சரத்குமார் பாத்திரமும் இன்னும் மெருகேறியது. 




யானை கேட்ட ரவிக்குமார்... குதிரை கொடுத்த செளத்ரி!


ரவிக்குமார் எப்போதுமே தேதியை பிக்ஸ் செய்து விட்டு படத்தை இயக்கும் திறமை கொண்டவர். அதனால் அவரது சூட்டிங் பரபரக்கும். ப்ளாஷ்பேக் காட்சியில் யானை கட்டி போரடிக்கும் காட்சி படமாக்க வேண்டும். தமிழ்நாட்டில் யானைகளுக்கு அதிக வாடகை கேட்கிறார்கள். நிறைய கட்டுப்பாடுகள் வேறு. தயாரிப்பாளருக்கு போன் செய்து யானைகள் கேட்கிறார் ரவிக்குமார். ‛அதெல்லாம் வேணாம்யா... குதிரையை வெச்சு எடுத்துக்கோ...’ என்கிறார் செளத்ரி. ‛சார்... யானை கட்டி போரடிப்பது தான் காட்சியே... அதில் எப்படி குதிரை...’ என கேள்வி எழுப்பிய ரவிக்குமார், ‛சரி விடுங்க... செலவு வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்...’ என போனை கட் செய்கிறார். உதவி இயக்குனர் சேரனை அழைக்கிறார். ‛நீ என்ன பண்ணுவியோ.... எனக்கு தெரியது... கேரளாவில் இருந்து எனக்கு யானை வேண்டும்,’ என்கிறார். உடனே கேரளா புறப்பட்ட சேரன், மறுநாள் 5 வாகனங்களில் 5 யானைகளுடன் சூட்டிங் ஸ்பாட் வருகிறார். அந்த பிரம்மாண்ட காட்சி நினைத்தபடி எடுத்து முடிக்கப்பட்டது. 




கவுண்டமணி ‛காது சவுண்ட்’ வந்தது எப்படி!


ஏற்கனவே கூறியபடி, பட்ஜெட் படம் என்பதால், இசையமைப்பாளர் வாய்ப்பை சிற்பி பெற்றிருந்தார். ரம்மியமான இசையமைப்பாளர் அவர். இசை அவரிடம் கொட்டும். நாட்டாமைக்கு அவர் தந்த பாடல்கள், படத்தின் வெற்றியில் பெரும் பங்கு. பாடல்கள் எல்லாம் வந்துவிட்டது, ஆனால் பின்னணியில் ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்று நினைத்தார் சிற்பி. அதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே ரீல்களை வாங்கி, அவற்றுக்கு ஏற்றவாறு பின்னணியை உருவாக்கினார். டீச்சருக்கு ஒரு சத்தம், வில்லனுக்கு ஒரு சத்தம், பிளாஷ்பேக் ஒரு சத்தம், நாட்டாமை வரும் போது ஒரு சத்தம் என வித்தியாசமான இசை கோர்வைகளை அவர் பயன்படுத்தினார். குறிப்பாக கவுண்டமணியை சரத்குமார் அடிக்கும் போது, காது கேட்காமல் ஒரு சத்தம் வர வேண்டும். அதற்கு பல சத்தங்களை பயன்படுத்தியும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் மிக்ஸரில் வரும் ஒரு ஒலியை பயன்படுத்தி, உய்..... என்கிற அந்த சத்தத்தை பயன்படுத்தியுள்ளனர். இப்படி தான் நாட்டாமை ஒவ்வொரு பாகமாக செதுக்கி செதுக்கி உருவானது. அதன் அறுவடையை இன்றும் தயாரிப்பு நிறுவனம் பெறுகிறது என்றால் அதற்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் சாமர்த்தியமே காரணம்.