ஆந்திரா பருப்புப் பொடி மிகவும் பிரபலம். இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த பொடி நன்கு காரசாரமாக இருப்பதுடன் இதனுடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவை அலாதியாக இருக்கும்.  நல்லெண்ணெய்யும் இந்த பொடிக்கு நல்ல காம்பினேஷன்.


உங்களுக்கு குழம்பு எதுவும் பிடிக்காத சமயத்தில் அல்லது வித்தியாசமான ஒரு சுவையை சுவைக்க விரும்பும் நேரத்தில், இந்த பொடியை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் நிச்சயம் வழக்கத்தை விட கூடுதலாக சாப்பிடுவீர்கள். இந்த பொடியை மிக எளிமையாக நாம் வீட்டிலேயே எப்படு தயாரிப்பது என்று தான் பார்க்க போகின்றோம்.


தேவையான பொருட்கள்


துவரம் பருப்பு- 100 கிராம்
பாசிப்பருப்பு- 100 கிராம்
உடைத்த கடலை (பொட்டுக்கடலை)- 100 கிராம்
பூண்டு- 100 கிராம்
சீரகம்- 2 மேசைக்கரண்டி
குண்டு மிளகாய்- 15-20
பெருங்காயம்- 30 கிராம்
கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
வெல்லம்- 20 கிராம்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
உப்பு- தேவையான அளவு.


செய்முறை


ஒரு கடாயில் அடுப்பில் வைத்து, முதலில் துவரம் பருப்பை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


பாசிப்பருப்பு மற்றும் உடைத்த கடலையை  தனித் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


தோலுரித்த பச்சை பூண்டை கடாயில் வறுத்தெடுக்க வேண்டும். பின் சீரகம், குண்டு மிளகாய் ஆகியவற்றையும் வறுத்ததெடுக்க வேண்டும். ( சீரகம் உடனடியாக தீய்ந்து விடும் எனவே தீயை மிக லேசாக வைத்து வறுக்க வேண்டும். 


பின்னர் கருவேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதையும் மொறு மொறுவென வறுக்க வேண்டும். 


கட்டியான பால் பெருங்காயமாக இருந்தால் அதனை, 30 கிராம் அளவு எடுத்து கடாயில் ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


வறுத்தெடுத்த அனைத்துப் பொருட்களும் ஆறிய பின் அதில் தேவையான அளவு கல் உப்பும் சிறிது வெல்லமும் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


அவ்வளவுதான் சுவையான ஆந்திரா பருப்பு பொடி தயார். சூடான சாதத்தின் மீது இந்த பொடியை தூவி நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை சூப்பரா இருக்கும்.


மேலும் படிக்க 


Badam Kesari: புரதச்சத்து நிறைந்த பாதாமில் நாவில் எச்சில் ஊறும் சுவையில் கேசரி செய்யலாம்.. செய்முறை இதோ!


Beetroot Chutney : ஆரோக்கியமான பீட்ரூட் சட்னி.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க..


Instant Dosa: வீட்டில் தோசை மாவு இல்லையா? இன்ஸ்டண்ட் தோசை, சட்னி செய்து அசத்துங்க- செய்முறை இதோ!