நாம் மாலை நேரத்தில் நமக்கு பிடித்த நொறுக்குத் தீனிகளை சுவைக்க விரும்புவோம். இதற்கு பேக்கரியில் அதிக விலை கொடுத்து ஸ்நாக்ஸ் வாங்குவோம். இனி நீங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்பினால் பேக்கரிக்கு போகத்தேவை இல்லை. வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை வைத்து மொறு மொறு ஸ்நாக்ஸ் செய்து விடலாம்.
இதை வெறும் 10 நிமிடத்தில் மிக எளிமையான முறையில் செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவர். தற்போது நாம் காரசாரமான மொறு மொறு காராபூந்தி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் ,சோடா உப்பு - 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு.
செய்முறை
முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து எடுத்துக் கொள்ளவும். ( மாவு மென்மையாகவும் கெட்டிப் பதத்திலும் இருக்க வேண்டியது அவசியம்)
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், பூந்தி கரண்டியை (சிறு, சிறு துளைகள் உள்ள ஜல்லிக்கரண்டியை கூட பயன்படுத்தலாம்) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, கடலை மாவுக் கலவையை அந்தக் கரண்டியில் ஊற்ற வேண்டும்.
இப்படி செய்தால் மாவு துளைகள் வழியாக எண்ணெயில் விழும். அதனை பொன்னிறமாக பொரித்து கரண்டியால் வடிகட்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
இதே முறையில் மீதம் இருக்கும் மாவிலும் பூந்தி செய்து எடுத்துக் கொள்ளலாம். பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும். அவ்வளவுதான் காரசாரமான மொறு மொறு காராபூந்தி தயார்.
மேலும் படிக்க
Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..