நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதன் காட்சிகளை வெளியிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும்  ஹீரோக்களாக நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படம் இன்று (பிப்ரவரி 9) தியேட்டரில் வெளியாகியுள்ளது. 






இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டை மையப்படுத்திய படம் என்பதால் இதில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் நடித்திருக்கிறார். இதில் ரஜினியின் கேரக்டருக்கு  “மொய்தீன் பாய்” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. விளையாட்டில் கலந்துள்ள மத அரசியலுக்கு எதிரான கருத்துகளை லால் சலாம் படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏற்கனவே கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியிருந்தது. இதில் நடிகர் விஜய்யுடனான சர்ச்சைகளுக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். இதேபோல் தன்னுடைய அப்பாவை சங்கீ என சொல்லாதீர்கள். அவர் அப்படி இருந்திருந்தால் இந்த மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்திருக்கவே மாட்டார் என உணர்ச்சி பொங்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார். 


மேலும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி பேசிய வசனங்கள்,அவருக்காக வைக்கப்பட்ட வசனங்கள் என எல்லாம் ட்ரெண்டாகின. இந்நிலையில் லால் சலாம் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதேசமயம் மற்ற மாநிலங்களில் காலையிலேயே முதல் காட்சி தொடங்கி விட்டது.


இப்படியான நிலையில் காலை காட்சி பார்க்கும் பிற மாநில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் லால் சலாம் பட காட்சிகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு லைகா நிறுவனம் தரப்பில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படி எல்லாம் வீடியோ எடுத்து பதிவிட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என கண்டித்துள்ளனர்.