எப்படியாவது சினிமாத் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு பலர் வருகிறார்கள். இவர்களில் சிலருக்குதான் வாய்ப்புகள் அமைகின்றன. வாய்ப்பு கிடைப்பதைக் காட்டிலும் கிடைத்த அந்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வது என்பது இன்னும் பெரிய போராட்டம். அப்படி சினிமாவில் நடிகராக வாய்ப்பு கிடைத்தும் பெரிய உயரத்திற்கு செல்ல முடியாமல் காணாமல் போனவர்கள் பலர். அந்த வகையில் அஜித் குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த நடிகர் சாவி சித்து தற்போது பட வாய்ப்புகளே இல்லாமல் வாட்ச்மேல் வேலை செய்து வருகிறார்

வாட்ச்மேன் வேலை செய்யும் அஜித் பட நடிகர் 

லக்னோவில் பிறந்து வளர்ந்த சாவி சித்து மாடல் ஆக வேண்டுமென்கிற கனவோடு சண்டிகர் சென்றார். இதன் பின் லக்னோவில் சட்ட படிப்பை முடித்துக் கொண்டே நாடக குழுவில் சேர்ந்து நடிப்பும் கற்று வந்தார். நடிகராக வேண்டும் என்கிற கனவோடு மும்பை சென்றார். 1995 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'தாகத்' படத்தில் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அனுராஜ் கஷ்யப் தான் இயக்கிய பாஞ்ச் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். ஆனால் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் இயக்கிய பல படங்களில் சாவி சித்துவுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். தமிழில் அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவந்த அவருக்கு பெரியளவில் பட வாய்ப்புகள் வரவில்லை. இன்னொரு பக்கம் அவரது மனைவி , பெற்றோர்களை அடுத்தடுத்து இழந்தார் சித்து. ஒருகட்டத்திற்கு மேல் தனது அன்றாட செலவுகளை சமாளிக்க கட்டிட பணியிடங்களில் வாட்ச்மேன் வேலை பார்க்கத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தும் போதுமான ஊதியம் அவருக்கு கிடைப்பதில்லை. ஒரு பஸ் டிக்கெட் எடுக்க கூட தன்னிடம் பணம் இல்லை என சாவி சித்து தெரிவித்துள்ளார். நடிகராகும் கனவில் வந்த சாவி சித்துவுக்கு  கடைசியாக தான் எப்போது திரையரங்கத்திற்கு சென்று படம் பார்த்தோம் என்பது கூட நினைவில் இல்லை. சாவி சித்துவின் கவலைக்கிடமான நிலை பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசிவருகிறார். அக்‌ஷய் குமார் , அஜித் குமார் போன்ற மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் நடித்த அவருக்கு உதவ திரைத்துறையினர் முன்வந்து வாய்ப்பளிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.