பள்ளி மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாக குத்தாலம் அருகே பழையகூடலூர் தனியார் பள்ளியில் நடத்தப்பட்ட மாதிரி ஐ.நா. சபைக்கூட்டத்தில், 30 நாடுகளின் பிரதிநிதிகள் போல், 160 மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த பழைய கூடலூர் கிராமத்தில் உள்ள ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் விதமாகவும், ஐக்கிய நாடுகள் சபை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மாதிரி ஐ.நா. சபைக்கூட்டம் நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட தனியார் பள்ளிக் கல்வி அலுவலர் நிர்மலாராணி, தாசில்தார் சித்ரா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தி.முத்துக்கணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுக்காக்களைச் சேர்ந்த 22 பள்ளிகளில் இருந்து 160 மாணவ-மாணவிகள் மற்றும் 30 ஆசிரியர்கள், 30 நாடுகளின் பிரதிநிதிகளைப் போல் கலந்துகொண்டு பேசினர்.
மாணவர்களின் தலைமைப் பண்பு, வாதிக்கும் திறமை, பல்வேறு தேசங்ளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உலகளாவிய பிரச்னைகள், நாட்டு நடப்புகள் ஆகியவற்றை இளைய சமுதாயத்தினரான மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 8 -வது ஆண்டாக இந்த மாதிரி ஐ.நா. சபை நடத்தப்பட்டது. பள்ளியின் முதல்வர் கணேசன் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார். இந்த மாதிரி ஐ.நா பொதுச்சபையில் ஜி20 நாடுகள் குறித்த உலகலாவிய பார்வை, பசி மற்றும் வறுமை இல்லா நிலையை உருவாக்குதல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கம், எதிர்கால சந்ததியினருக்கு தரமான கல்வியின் தேவை ஆகிய 4 தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிறைவாக, பள்ளியின் மானிடவியல் துறைத் தலைவர் அட்சயலிங்கம் நன்றி கூறினார்.