ஐசிசியுடன் இணைந்து 13வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டினை மிகவும் பிரமாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்திய கையுடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரினை நடத்த தயாராகி வருகின்றது. இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்துக்கான ஏற்பாட்டினையும் செய்து வருகின்றது. 


ஐ.பி.எல். ஏலம்:


இந்நிலையில் கடந்த வாரம் ஐபிஎல்-லில் உள்ள 10 அணிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட ட்ரேடிங்கிற்கான நேரம் முடிவடைந்து விட்டது. அதில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்களை அணிகள் செய்தது. குறிப்பாக மும்பை அணி தன்னிடம் இருந்த ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டரான கேமரூன் க்ரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு விற்றது. தன்னிடம் இருந்த 11 வீரர்களை விடுவித்தது மட்டும் இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரருமான ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்கியது. இது யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்ரேடிங்காக இருந்தது. அதன் பின்னர் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் ஒரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட 8வது வீரர் ஆனார் சுப்மன் கில். 


அதேபோல் பெங்களூரு அணி தரப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஹசில்வுட் கழட்டி விடப்பட்டார். அதேபோல் சுழற்பந்தில் பெங்களூரு அணிக்கு கடந்த சீசனில் தூணாக விளங்கிய இலங்கை அணியின் ஹசரங்காவையும் கழட்டி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இருந்து பென் ஸ்டோக்ஸ் கழட்டி விடப்பட்டார். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க கொல்கத்தா அணி தன்னிடம் இருந்த வீரர்களில் 12 வீரர்களை தொக்காக வெளியேற்றியது. அதில் குறிப்பாக உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தகூர் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. பஞ்சாப் அணி தரப்பில் மிகவும் வளர்ந்து வரும் இளம் வீரரான தமிழ்நாட்டினைச் சேர்ந்த ஷாரூக் கானை கழட்டி விட்டது. சி.எஸ்.கே ரசிகர்கள் தரப்பில் தற்போது உள்ள ஆர்வம் சென்னை அணி அவரை அணியில் சேர்க்குமா? என்பதுதான். 


புதியவர்களுக்கு கடும் போட்டி:


பெங்களூரு அணி இம்முறை ஏலத்திற்கு வரும் பென் ஸ்டோக்ஸை விலைக்கு வாங்க தயாராக உள்ளது போல் தெரிகின்றது. அதேபோல் இம்முறை புதிதாக களம் இறங்கும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் போன்ற முன்னணி பெயர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் சிறப்பாக பங்களித்த அதிலும் பழைய பந்தில் விக்கெட்டுகளை அள்ளிய கோட்ஸீ முதல் முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளார். அதேநேரத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால், இந்த மினி ஏலத்தில் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பெயரை பதிவு செய்யவில்லை. இவர் மும்பை அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை. 



டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்காக ஆயிரத்து 166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 1,166 வீரர்களில் 830 பேர் இந்தியர்கள், 336 பேர் வெளிநாடுகள், 45 பேர் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியலில் 212 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளனர். 909 வீரர்கள் சர்வதேச போட்டிகளில் களமிறங்காத வீரர்கள் ஆவர். அனைத்து ஐபிஎல் அணிகளும் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள மினி ஏலத்திற்காக காத்துக்கொண்டு உள்ளது.