மாநில பேரிடர் மீட்பு குழு

 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கனமழை மற்றும் புயலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளும் தமிழக அரசு சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



 

தமிழக பேரிடர் மேலாண்மை குழுவினர்

 

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் நேற்று 50 பேர் வருகை புரிந்த நிலையில் , இன்று தமிழக பேரிடர் மேலாண்மை குழுவினர் 100 பேர் வருகை புரிந்துள்ளனர். இவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிய வருகிறது.

 



 

இரண்டு குழுக்களாக பிரிந்து


இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தின் நிலைமை குறித்து காலை மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாகவும் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்  இரண்டு குழுக்களாக பிரிந்து காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியிலும், காஞ்சிபுரம் பகுதியிலும்  பணியில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

 

Cyclone Michaung(மிக்ஜாம் புயல்)


தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில்  ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” சூறாவளி புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் நகர்ந்து கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ வேகத்தில், சூறாவளி புயலாக “மிக்ஜாம்” தீவிரமடைந்து, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.


இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) காலை தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும். அதன்பிறகு, இது கிட்டத்தட்ட வடக்கு நோக்கி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நெருக்கமாகவும் நகர்ந்து, நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை டிசம்பர் 5 ஆம் தேதி முன் பகலில் ஒரு சூறாவளி புயலாகக் கடக்கும், அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசுக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்றும் நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.