தேனி டாக்டர் தூக்கிட்டு தற்கொலை: அதிகாரி லஞ்ச டார்ச்சர் என மனைவி போலீசில் புகார்!
ஹோமியோபதி மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செல்வி எலக்ட்ரோ ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் சீனிவாசன் (வயது 50). இவர் முறையான பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவம் மட்டுமே செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் அந்தப் பகுதியில் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்ததாகவும் இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு தேனி மாவட்ட குடும்ப நலம் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனராக பணியாற்றி வரும் மருத்துவர் லட்சுமணன் என்பவருக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்து வந்த சீனிவாசன் அலோபதி மருந்து செலுத்தி வந்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் லட்சுமிபுரம் பகுதியில் சீனிவாசன் நடத்தி வந்த ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டதாக மருத்துவத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசனிடம் லஞ்சமாக பணம் கேட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம் இணை இயக்குனர் லட்சுமணன் பெற்றதாகவும் மீண்டும் தொடர்ந்து மாதம் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் போலி மருத்துவர் என்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பேன் என்று தொடர்ந்து மிரட்டியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹோமியோபதி மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஹோமியோபதி மருத்துவரின் மனைவி சாந்தி பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துகுமார் ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த ஹோமியோபதி மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் ஹோமியோபதி மருத்துவரின் தற்கொலைக்கு காரணமான தேனி மாவட்ட மருத்துவதுறை இணை இயக்குனர் லட்சுமணனை கைது செய்ய வேண்டும் என்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும் ஹோமியோபதி மருத்துவரின் உயிரிழப்புக்கு காரணமான இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் பிரேத பரிசோதனைக்கு பின்பு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக உறவினர்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லட்சுமிபுரம் ஊர் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் இணை இயக்குனர் லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து போராட இருந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசனின் உடலை வாங்கி நல்லடக்கம் செய் ஒப்புக்கொண்டனர்.
பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன் லஞ்சப் பணம் கேட்டு மிரட்டியதால் ஹோமியோபதி மருத்துவர் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்ய தூண்டிய லட்சுமணன் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்