குழந்தைகள் டவுன்லோட் செய்த App ஆல் வந்த ஆப்பு... பறிபோன ரூ.24 லட்சம் - உஷார் மக்களே
நகை அடகு கடை வைத்து நடத்தி வந்த தம்பதியினரிடமிருந்து 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சம் திருட்டு.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த குமார்(42) இவர் பலசரக்கு கடை வைத்திருக்கிறார். அவருடைய மனைவி, தேவாரம் பகுதியில் நகை அடகு கடை ஒன்றை வைத்து வைத்திருக்கிறார். கணவன், மனைவி இருவருமே வணிகம் செய்து வருவதால், இவர்கள் 2 பேரும், தனித்தனியாக ஆன்டிராய்டு வசதியுள்ள செல்போன்களை பயன்படுத்தி வந்ததுடன், வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணத்தை செல்போன்களில் உள்ள வங்கி கணக்குகள் மூலம் அவ்வப்போது கண்காணித்து வந்துள்ளார்கள். இதற்காக தங்களின் வங்கிக் கணக்கு தொடர்பான செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுடைய குழந்தைகள் அடிக்கடி செல்போன்களை எடுத்து வீடியோ பார்ப்பது, விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் குமார் தனது வங்கிக் கணக்கு இருப்பு மற்றும் மனைவியின் வங்கிக் கணக்கு இருப்பு விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை வங்கிக்கு சென்று சரிபார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டு இவர், வங்கிக்கு சென்று இருப்பு விவரங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது அவர்கள் பயன்படுத்தி வந்த 3 வங்கிக் கணக்குகளில் இருந்து, மொத்தம் ரூ.24 லட்சம் ருபாய்க்கு மேல் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியடைந்தவர் பணம் எங்கே சென்றது என்ற விவரங்களை சரிபார்த்த போது, பல்வேறு புதிய வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணையாக பணம் சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குழந்தைகள் பதிவிறக்கம் செய்த ஒரு செல்போன் செயலி மூலம், மர்ம நபர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இந்த நூதன முறையிலான பணம் பறிப்பில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், பணம் பரிமாற்றம் நடந்த மர்ம நபர்களின் 9 வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
அதில், ஒரு வங்கிக் கணக்கு பீகார் மாநிலம் பாட்னா அருகே பண்டாரக் பகுதியை சேர்ந்த ஜோகி மஹ்தோ மகன் அர்ஜூன்குமார் (22) என்பவரின் பெயரில் இருந்தது. அவரை போலீசார் தேடி வந்தார்கள், அவர் பெங்களூரு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் சென்றனர். அங்கு அர்ஜூன்குமாரை போலீசார் கைது செய்தனர். 12ம் வகுப்பு படித்துவிட்டு அவர் கட்டுமான தொழில் செய்து வந்திருக்கிறார். மேலும், அவர் தனது பெயரில் தொடங்கிய வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை இந்த மோசடி செய்யும் கும்பலுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் தொகை பெற்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல் பீகாரை சேர்ந்த அவருடைய நண்பர்கள் சிலரும் இதுபோன்ற மோசடி கும்பலுக்கு செல்போன், வங்கிக் கணக்கு விவரங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அர்ஜூன்குமாரை தேனிக்கு போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர். அவருடைய நண்பர்கள் 2 பேர் உள்பட இந்த கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

