'அழகா இல்லை'.. வாயில் ஆசிட் ஊற்றி கர்ப்பிணி மனைவியை கொன்ற கொடூர கணவன்!
கழிவறை ஆசிட்டை குடிக்க கணவர் வற்புறுத்தியதால் கர்ப்பிணி மனைவி உயிரிழந்தார்
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் மனைவி அழகில்லை என்பதால் கர்ப்பிணிப் மனைவியை, கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடிக்க சொல்லி கணவர் வற்புறுத்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கணவர் தப்பிச்சென்றார். தருண் என அடையாளம் காணப்பட்ட அவரது கணவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்து போன பெண் கல்யாணியை தருண் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு கல்யாணி கர்ப்பமான பிறகு தருண் அவரை துன்புறுத்த தொடங்கியதாக கூறப்படுகிறது. மேலும், வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை கல்யாணி வாயில் ஊற்ற தருண் கட்டாயப்படுத்தியுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், நிஜாமாபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கர்ப்பமாக இருந்தபோது, கழிவறை ஆசிட்டை குடிக்க வற்புறுத்தி கொலை செய்ததாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தருண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.கல்யாணி தனது வாழ்க்கையின் கடைசி மூன்று மாதங்களில் கணவரால் அவமானம் மற்றும் உடல் உபாதைகளை அனுபவித்தார் என்று கூறப்படுகிறது.
வழக்கின் தற்போதைய நிலை என்ன?
கல்யாணியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தருண் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 304-பி, மற்றும் 498-ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மாநிலங்கள் முழுவதும் வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2020 முதல் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தெலங்கானா காவல்துறை வலியுறுத்தி வருகிறது.
பல பெண்கள் வரதட்சணை துன்புறுத்தல் இருந்தபோதிலும் தங்கள் துணையிடம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நாட்களில் புகாரளிக்காமல், கொடுமையை தாங்க முடியாத நிலையில் மட்டுமே உதவியை நாடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்