Salem Prison: சேலம் சிறையில் கைதிகள் பயன்படுத்திய நவீன செல்போன்... ஸ்கெட்ச் போட்டு பிடித்த வார்டன்கள்
யாரிடமெல்லாம் அவர்கள் பேசினார்கள்? அசம்பாவித சம்பவம் நடத்த திட்டம் தீட்டினார்களா? என போலீசார் விசாரணை.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இதில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தீவிர சோதனைகளை தாண்டியும் செல்போன் சிறைக்குள் செல்கிறது என்றால் சிறை வார்டன்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறைக்குள் அடிக்கடி சோதனை குழுவை சேர்ந்த வார்டன்கள் திடீர் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள 17வது பிளாக் பகுதியில் சென்னையை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த அறை பகுதியில் வார்டன்கள் யாராவது சென்றால், ஏன் இங்கு அடிக்கடி வருகிறீர்கள்? இவ்வாறு வந்து தொந்தரவு செய்யாதீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த அறை மீது வார்டன்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதிரடியாக அங்கு ரகசிய சோதனை நடத்த திட்ட மிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கம் போல செவ்வாய்க்கிழமைகளில் கைதிகளிடம் குறைகள் கேட்கப்படும். அவ்வாறு குறை கேட்பது போல சென்ற கண்காணிப்பாளர் வினோத் மற்றும் அதிகாரிகள் அதிரடியாக சென்னை கைதிகள் அறை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர், அப்போது அறையின் எதிர்பகுதியில் உள்ள அரசமரத்தில் 2 கிளைகளுக்கு இடையில் பதுக்கி வைத்திருந்த செல்போனை வார்டன்கள் கண்டெடுத்தனர். மேலும் கழிவறை பகுதியில் புதைத்து வைத்திருந்த செல்போன் சார்ஜரையும் எடுத்தனர். சிறிய வகை செல்போனான அதில், அதிநவீன வசதிகள் இருந்துள்ளது. குறிப்பாக பேச்சை பதிவு செய்யும் வசதியும் அதில் உள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனிலிருந்து கைதிகள் நேற்று வரை பேசிய எண்களும் அதில் இருந்துள்ளது. எனவே அவர்கள் நீண்ட நாட்களாக செல்போனை பயன்படுத்தி இருக்கலாம் என தெரிகிறது.
இதையடுத்து செல்போனை பதுக்கி வைத்து பயன்படுத்தியதாக சென்னை வடபழனி யுகேந்திரன் (எ) யுகி, அரும்பாக்கம் ஏசா (எ) செபஸ்டீன், ஜெய பிரகாஷ், சேட்டு (எ) மகாலிங்கம் ஆகியோரை உறவினர்கள் சந்திக்க மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பறிமுதல் செய்த செல்போனை சேலம் மாநகர் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, செல்போன் பயன்படுத்திய 3 கைதிகள் மீது புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் செல்போனில் உள்ள எண்களை வைத்து விசாரித்தால் யாரிடமெல்லாம் அவர்கள் பேசினார்கள்? அசம்பாவித சம்பவம் நடத்த திட்டம் தீட்டினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மத்திய சிறையில் சென்னையைச் சேர்ந்த கைதிகள் நவீன செல்போனை பயன்படுத்திய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.