ATM Theft: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை; ரூ.10 லட்சமா? எப்படி? - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
குருபரபள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை பணம் எடுக்க வந்த பொதுமக்கள், உள்ளே ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவட்டத்தில் உள்ள குருபரபள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம் போல ஏடிஎம்மில் பணத்தை நிரப்பி வங்கி ஊழியர்கள் சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பார்த்தபோது ஏடிஎம் உடைந்து கிடப்பதைக் கண்டு கட்டிட உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து குருபரப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் வந்த மர்ம நபர்கள் வெல்டிங் கருவி மூலம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை எடுத்துள்ளது தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் பணத்தை திருடியவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். திருடப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் வந்து அளிக்கும் தகவல் மூலம் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இரவு பகலாக போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் கிருஷ்ணகிரி நகரத்தின் மையப்பகுதியில் நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது