ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பாணியில்! உணவு டெலிவரி உடை! கத்தி, முகமூடி! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது எப்படி?
krishnagiri Crime: சினிமா பாணியில் திட்டம் தீட்டிய நான்கு இளைஞர்கள், கடைசியில் பேருந்து நிலையத்தில் தூங்கியபோதே போலீசாரிடம் சிக்கிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் நகர காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருப்பு உடை அணிந்த 4 இளைஞர்கள் சந்தேகப்படும் வகையில் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ஓசூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், போச்சம்பள்ளி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், ஊருக்குச் செல்லாமல் பேருந்து நிலையத்தில் கருப்பு உடை அணிந்து படுத்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
இதையடுத்து அவர்களிடம் இருந்த பையைச் சோதனை செய்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் கத்தி, முகமூடி, கையுறைகள், மயக்க மருந்து, சிரிஞ்ச், லேசர் லைட், பூச்சிக்கொல்லி மருந்து, ஆசிட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள கொரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சிங்காரவேலன், போச்சம்பள்ளி அருகே மலையாண்ட அள்ளியைச் சேர்ந்த கல்கி, இளம்பருதி, விமல் என்பது தெரியவந்தது. இவர்களில் சிங்காரவேலன், கல்கி ஆகியோர் வாடகை வாகன ஓட்டுநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இளம்பருதி தருமபுரியில் உள்ள கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இரண்டாம் ஆண்டும், விமல் மொரப்பூரில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: என் புருஷன் உனக்கு கேட்குதாடி? சாணியை கரைத்து ஊற்றி தாக்குதல்! கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!
விசாரணையில் அம்பலம்
இவர்கள் காவல்துறையிடம் சிக்காமல் எப்படிக் கொள்ளையடிப்பது என சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பார்த்து, அதன்படி திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகள், அடையாளம் தெரியாமல் இருக்க முகமூடிகள், பாதுகாப்புக்காக கத்தி ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. யாராவது பிடிக்க முயன்றால் மயக்க மருந்தைப் பயன்படுத்த ஊசியும் வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இருட்டில் அடையாளம் தெரியாமல் இருக்க கருப்பு உடை அணிந்ததுடன், சிசிடிவி கேமராக்களை மறைக்க கருப்பு ஸ்பிரே பெயிண்ட்டும், தங்களுக்குள் ரகசியமாக சைகை கொடுக்க லேசர் லைட்டும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
சுற்றித் திரிந்து நோட்டமிட்ட கும்பல்
அதுமட்டுமல்லாமல் இந்த கும்பலின் மற்றொரு திட்டத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் உறைந்தனர். Swiggy உணவு டெலிவரி ஊழியர்களைப் போல உடை அணிந்து, உணவு விநியோகம் செய்வது போல் முக்கியப் பகுதிகளில் சுற்றித் திரிந்து நோட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அங்கு சுற்றி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது உணவு டெலிவரி உடையில் வந்து சம்பவம் செய்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















