மதுபோதையில் விபரீதம்! பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர் பலி
புதுச்சேரி: வில்லியனூரில் அருகே பிரியாணிக்காக கொதிக்க வைத்த வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

புதுச்சேரி: வில்லியனூரில் உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு மதுபோதையில் சென்ற ஓட்டுநர், பிரியாணி தயாரிப்பதற்காக கொதிக்க வைத்திருந்த வெந்நீர் அண்டாவில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் தேவநாதன். ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், சரிவர வேலைக்குச் செல்லாமல் மது அருந்தும் பழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் ஹோட்டலுக்கு சென்றார்
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி தேவநாதன் மதுபோதையில் வில்லியனூரில் உள்ள தனது உறவினர் நடத்தி வரும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது ஹோட்டலில் பிரியாணி தயாரிப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பிரியாணி தயாரிப்பதற்காக பெரிய பாத்திரம் ஒன்றில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் தேவநாதன் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் அண்டாவுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
உடல் வெந்த நிலையில் மீட்பு
கொதிக்கும் வெந்நீரில் விழுந்ததில் தேவநாதனின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறித் துடித்துள்ளார். இதையடுத்து ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தீவிரமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரசு மருத்துவமனையில் தேவநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், உடலில் ஏற்பட்டிருந்த கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேவநாதன் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவநாதன் ஹோட்டலுக்கு வந்தது முதல் வெந்நீர் அண்டாவில் தவறி விழுந்தது, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களின் முழு விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா, விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வில்லியனூரில் மதுபோதையில் ஹோட்டலுக்குச் சென்ற ஓட்டுநர் கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















