புதுச்சேரியில் டிஜிட்டல் அரெஸ்ட் மிரட்டல்! போலீஸ் வேடத்தில் வீடியோ கால் செய்த மர்ம நபர்!
புதுச்சேரியில் 55 வயது பெண்ணைத் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி எனக் கூறி தொடர்புகொண்ட மர்ம நபர், அவரது ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தி மிரட்டியுள்ளார்.

புதுச்சேரி: உங்கள் ஆதார் எண்ணுடன் பயங்கரவாதிகளின் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது; அந்த எண்ணைப் பயன்படுத்தி சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுகின்றன எனக் கூறி 55 வயது பெண்ணை மிரட்டிய சைபர் மோசடி கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலீஸ் அதிகாரி போன்று உடையணிந்து வீடியோ காலில் பேசியும் அந்தப் பெண்ணை அச்சுறுத்த முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தான் தொலைத்தொடர்புத் துறை அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த நபர், உங்களுடைய பி.எஸ்.என்.எல். (BSNL) தொலைபேசி இணைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்தப் பெண்ணிடம், இணைப்பில் உள்ள பிரச்னையைச் சரிசெய்வதற்காக ஆதார் எண்ணைக் கேட்டுள்ளார். அவரும் எவ்வித சந்தேகமும் இன்றி தனது ஆதார் எண்ணைத் தெரிவித்துள்ளார்.
ஆதார் எண்ணுடன் பயங்கரவாதிகளின் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல்!
பெண்ணிடம் ஆதார் எண்ணைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர், அடுத்தகட்டமாக அதிர்ச்சியூட்டும் வகையில் பேசியுள்ளார்.
உங்களுடைய ஆதார் எண்ணுடன் வேறொரு மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது. அந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதச் செயல்களிலும், பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும், விமானப் பயணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்படுவதால், இந்த விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளதாகவும், இதுதொடர்பாக உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறி அந்தப் பெண்ணை அச்சுறுத்தியுள்ளார்.
இதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், பின்னர் சுதாரித்துக்கொண்டு, தன்னிடம் இருப்பது ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே என்றும், எந்தவிதமான சட்டவிரோதச் செயல்களிலும் தனக்குத் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து நேரடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிப்பதாகவும் உறுதியாகக் கூறியுள்ளார்.
'உங்களை இந்தப் பிரச்னையில் இருந்து காப்பாற்றுகிறேன்' – அடுத்தகட்ட நாடகம்!
இதனால் அதிர்ச்சியடைந்த மர்ம நபர், தனது மோசடி முயற்சியைத் தொடரும் வகையில் புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையில் இருந்து உங்களைக் காப்பாற்றுகிறேன். உயர் அதிகாரிகளிடம் பேசச் சொல்கிறேன் என்று கூறி அந்தப் பெண்ணிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் அவரது பேச்சை நம்பாமல் உடனடியாக கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
போலீஸ் நிலையத்திலேயே வீடியோ கால் – அதிகாரி வேடத்தில் வந்த மர்ம நபர்!
இந்தச் சம்பவத்தில் அடுத்ததாக அரங்கேறிய நிகழ்வு சைபர் கிரைம் போலீசாரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அந்தப் பெண் கோரிமேடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அமர்ந்து புகார் அளித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், மீண்டும் மர்ம நபர் அவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார்.
இந்த முறை போலீஸ் அதிகாரியைப் போன்ற உடையணிந்து, அதிகாரி தோரணையில் பேசி அந்தப் பெண்ணை மிரட்ட முயன்றுள்ளார். வீடியோ காலில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ஒருவர் பேசுவதைப் பார்த்த அங்கிருந்த சைபர் கிரைம் போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்படும் சைபர் மோசடி என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டனர்.
மேலும், அந்தப் பெண் காவல் நிலையத்தில் இருப்பதையும், போலீசார் அருகில் இருப்பதையும் அறிந்த மர்ம நபர் அடுத்த சில நிமிடங்களிலேயே வீடியோ கால் இணைப்பைத் துண்டித்துவிட்டு தப்பியுள்ளார்.
மோசடி கும்பலைப் பிடிக்க சைபர் போலீசார் விசாரணை!
இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர் பயன்படுத்திய மொபைல் எண்ணை அடிப்படையாகக் கொண்டு சைபர் கிரைம் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அந்த எண்ணின் அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைச் சேகரித்து, பெண்ணைத் தொடர்புகொண்ட நபர் யார், அவருக்குப் பின்னால் செயல்படும் சைபர் மோசடி கும்பல் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணின் துணிச்சலைப் பாராட்டிய போலீசார்!
தற்போது சைபர் மோசடி கும்பல்கள் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி, ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பெற்று பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் பெண்ணிடமும் டிஜிட்டல் அரெஸ்ட் பாணியில் மிரட்டல் விடுக்கப்பட்டபோதிலும், அதற்குப் பயந்து பணம் கொடுக்காமல் நேரடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
மேலும், போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே மீண்டும் வீடியோ கால் வந்ததால், மோசடி நபரின் செயல்பாட்டை நேரடியாகக் கண்டறியவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மோசடி கும்பலின் மிரட்டலுக்குப் பயப்படாமல் துணிச்சலுடன் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த அந்தப் பெண்ணை சைபர் கிரைம் போலீசார் பாராட்டினர்.
புதுச்சேரியில் 55 வயது பெண்ணை ஆதார் எண் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக மிரட்டி, போலீஸ் அதிகாரி வேடத்திலும் வீடியோ கால் செய்த சைபர் மோசடி கும்பல் குறித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை: தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், போலீசார் அல்லது சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி யாராவது தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதார் விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் வீடியோ காலில் மிரட்டுபவர்களை நம்ப வேண்டாம். சைபர் மோசடி தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்





















