Mr.World Manikandan | காதலித்து ஏமாற்றினார்.. கொடூரமாக அடித்தார்.. Mr.World மணிகண்டன் மீது புகார்களை குவிக்கும் காதலி
காதலிப்பதாக ஏமாற்றி ஏராளமாக பணம் பறித்ததுடன், மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் வென்ற மணிகண்டன் என்பவர் அவரை கொடூரமாகவும் தாக்கியதாக அவரது காதலி குற்றம்சாட்டியுள்ளார்
சென்னையைச் சேர்ந்த சந்தியா என்ற பெண் தனக்கு காதலனால் நேர்ந்த தாக்குதல்கள் என நக்கீரன் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
“எனது பெயர் சந்தியா. சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். மிஸ்டர் வேர்ல்ட் மணிகண்டன் என்பவர் பற்றிதான் நான் கூற உள்ளேன். காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரும், நானும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்தோம்.
தொடக்கத்தில் மிகவும் அன்பாக இருந்தார். அவருடைய தொழிலுக்கு நான் நிறைய உதவிகள் செய்துள்ளேன். அவரை நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அவரை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக, அவர் தொழில் வளர்ச்சிக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளேன். என்னால் இந்த வளர்ச்சி கிடைக்கிறது என்பதற்காக அவரும் என்னுடனே இருந்தார். சில மாதங்களுக்கு பிறகு அவர் என்னை விரும்புவதாக கூறினார். எனக்கும் அவர் மீது விருப்பம் இருந்தது.
சில நாட்கள் கழித்து, திடீரென்று என்னை அடிக்கத் தொடங்கினார். காரணமே இன்றி என்னை அடித்தார். அதே நேரத்தில், சில பெண்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவும் என்னை தொடர்புகொண்டனர். எனக்கு தெரியாமல் ஏதோ நடக்கிறது என்று மட்டும் நான் உணர்ந்தேன். ஆனால், என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என்னிடம் பழகும்போது நன்றாக இருப்பார். ஆனால், அவருக்கு பயங்கரமாக கோபம் வரும். ஒரு சைக்கோவைப் போல கோபம் வரும். முகம், கண் எல்லாம் வீங்கும் அளவிற்கு என்னை அடிப்பார். என்னுடைய மார்பு, நெஞ்சில் எல்லாம் அவரது கைகளால் ஓங்கி குத்தி தாக்கியுள்ளார்.
அப்போது, அவரிடம் நான் அமர்ந்து பேசும்போது, அவர் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்ததாக கூறினார். சிறுவயதிலே அவரது பெற்றோர்கள் அவரை விட்டுவிட்டு சென்றதால், அவர் ஒரு பாலியல் தொழில் செய்யும் பெண் வீட்டில்தான் வளர்ந்ததாக கூறினார். நான் நிறைய பார்க்கக்கூடாத விஷயங்களை பார்த்து வளர்ந்ததாலே எனக்கு நிறைய கோபம் வருகிறது. என்னை விட்டுவிட்டு மட்டும் போய்விடாதே என்றார்.
மேலும், அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிம் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நான் கையாண்டேன். என்னிடம் இருந்து எவ்வளவு உழைப்பை உறிஞ்சுக்கொள்ள முடியுமோ, அவ்வளவு உழைப்பை சுரண்டினார். இதற்கு எல்லாம் நான் சம்பளமென்று ஏதுமே வாங்கவில்லை. இதைப்பார்த்த சிலர் அவரிடம், ஏதாவது நிறுவனத்திடம் சமூக வலைதளங்களை கையாள கூறலாமே? ஏன் காதல் என்ற பெயரில் இந்த பெண்ணிடம் கூறியுள்ளீர்கள்? என்று கேட்டதற்கு, மற்றவர்கள் பணத்திற்காக செய்வார்கள். இந்த பெண் மனதில் இருந்து செய்யும். இந்த பெண்ணை விட்டுவிடக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். அவருடைய நெருக்கமான நண்பர்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். யாருமே அவரைப்பற்றி என்னிடம் ஏதுமே கூறியதில்லை.
பின்னர், நான் கேள்வி கேட்க, கேட்க என்னை அடிக்கத் தொடங்கினார். அவரது ஜிம்மில் பணியாற்றும் கவிதா என்ற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இது எனக்குத் தெரியாது. இதைப்பற்றி நான் கேட்டபோது, என்னைப் பற்றி மற்றவர்கள் புரளி பேசுவார்கள். அவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள். இதையெல்லாம் நம்பாதே என்பார். நானும் அவரை நம்பினேன். அவரின் வளர்ச்சிக்காக எவ்வளவு உழைக்க முடியுமோ, அவ்வளவு உழைத்தேன்.
ஆனால், அவர் என்னை அடிப்பதை மிகவும் அதிகரிக்கத் தொடங்கினார். சாலையில் அடிப்பது, காருக்குள் அடிப்பது என்று என்மீதான தாக்குதலை அதிகரித்தார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய சாட்டிங்குகளையும் நான் பார்த்தேன். அவர் நிறைய டேட்டிங் ஆப்களில் தன்னுடைய ப்ரொபைலை வைத்துள்ளார். அவரை முதன்முறையாக நான் சந்தித்தபோது, நான் ஒரு செலிபிரட்டி என்னால் வெளியில் வர முடியாது என்று கூறினார். மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றால் பெண்களின் ஆடைகள், செருப்புகள் இருக்கும். நான் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் நான் நம்பும் அளவிற்கு அவர் பதில் கூறுவார். நானும் முட்டாளைப் போல நம்பினேன்.
இந்த நிலையில், திடீரென்று ஒருநாள் அவரது வீட்டிற்கு நான் சென்றபோது அவருடன் ஜிம்மில் பணிபுரியும் பெண் அவர் வீட்டின் உள்ளே இருந்து வந்து கதவைத் திறந்தார். அந்த பெண் வீட்டில் இருப்பதுபோல ஆடைகள் அணிந்திருந்தார். மணிகண்டனும் உள்ளே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அந்த பெண்ணுடன் லிவிங் டு கெதர் தொடர்பில் இருந்தார் என்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் என்னை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும், அப்போதுதான் தெரிந்தது நான் சிங்கிள், கஷ்டப்பட்டு மேலே வந்துள்ளேன், காதல் என்ற பெயரில் பல பெண்களை அவர் பயன்படுத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
நான் வேலை செய்த மிகப்பெரிய சமூகவலைதள செயலி மூலமாக இவரையும், இவரது உடற்பயிற்சி நிலையத்தையும் பிரபலப்படுத்த நான் உதவியுள்ளேன். அவருடைய மேலாளர் என்று எனது நம்பரை அவரும் பல இடங்களில் அளித்துள்ளார். எங்கு சென்றாலும் அவருக்கு நான்தான் செலவு செய்வேன். அவர் ஒரு இடத்தில் கூட இதுவரை காசு செலவழித்ததே இல்லை. அவர் மாறிவிட்டார் என்று நினைத்துதான் அவரைப்பற்றி வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்தேன். ஆனால், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில் மணிகண்டன் அவரது குடியிருப்பு மேனேஜரை தாக்கும் காட்சிகள் வெளியானது. அப்போதுதான் அவர் என்னைப்போன்று பலரையும் இதுபோன்று தாக்கி வருவதும், அவரைப் பற்றி வெளியில் கூற வேண்டும் என்றும் எனக்குத் தோன்றியது.
சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கதாநாயகன்போல அவர் காட்டிக்கொண்டு வருகிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு வில்லன். நான் பேசுவதைப் பார்த்து என்னைப் போல பல பெண்கள் வெளியில் வருவார்கள் என்று தெரியவில்லை. காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளிக்க எனக்கு பயமாக இருந்தது. அவர் வசிக்கும் குடியிருப்பு மேலாளரை காவல் நிலையத்தில் அளித்த புகாரை திரும்பப்பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனக்கும் அதேபோல அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிலமுறை விளையாட்டாக ஆசிட் ஊற்றிவிடுவேன் என்றெல்லாம் மிரட்டியுள்ளார். அதனால், எனக்கு பயமாக இருந்தது. அவரது உடற்பயிற்சி நிலையத்தில் பெண்களிடம் ஆபாசமாக தொடுவது உள்ளிட்ட செயல்களில் அவர் ஈடுபடுவதாகவும் என்னிடம் கூறியுள்ளனர். எனக்கோ, என்னுடைய பொருட்களுக்கோ ஏதாவது ஆபத்தோ, சேதமோ ஏற்பட்டால் அதற்கு மணிகண்டன் மட்டுமே காரணம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய மணிகண்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி : நக்கீரன்