திருவாரூரில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவ மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மனமுடைந்த சோபிகா பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து மாணவி சோபிகா இது குறித்து தனது தோழிகளை எழுப்பி அவர்களிடம் கூறியுள்ளார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகத்தில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் மருத்துவ படிப்பு மட்டுமின்றி செவிலியர் கல்லூரி மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த கல்லூரியில் திருவாரூர் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காண்டுகள் படிப்பான பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மதுரையை சேர்ந்த செல்வகுமாரின் மகள் 19 வயதான சோபிகா திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள சிங்களாஞ்சேரி என்கிற ஊரில் தனது தோழிகளுடன் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரி சென்று வருகிறார். இந்த நிலையில் மாணவி சோபிகாவுக்கு கடந்த சில நாட்களாக அல்சர் காரணமாக கடுமையான வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து மனமுடைந்த சோபிகா தோழிகள் உறங்கியவுடன் பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து மாணவி சோபிகா இதுகுறித்து தனது தோழிகளை எழுப்பி அவர்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தோழிகள் உடனே 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து சோபிகாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது சோபிகாவிற்கு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக கொரோனா காலத்தில் பணிபுரிந்த ஆய்வக தொழில்நுட்பனர் ஒருவர் பணி சுமை காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு பணியின் போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மட்டும் அல்லாது செவிலியர் ஆய்வக தொழில்நுட்பனர் உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாடப் பிரிவில் பயின்று வரும் மதுரையை சேர்ந்த மாணவியான சோபிகா மருத்துவ மாணவியாக இருந்த போதிலும் கடுமையான வயிற்றுவலியை கூட பொறுக்க முடியாமல் அல்லது மருத்துவ ரீதியாக அல்சர் இருந்தால் வயிற்று வலி ஏற்படும் என்பதைக் கூட அறியாமல் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு ஏதும் காரணத்தினால் சோபிகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்