போதை பொருட்கள் கடத்தி வந்த மினி வேன் டிரைவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பல் கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டனர். மேலும், 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இளைஞர் ஒருவர் பேருந்து நிலையம் அருகில் பதட்டத்துடன் சுற்றி திரிந்துள்ளார். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த கன்னியாகுமரி போலீசார் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 


 

அந்த விசாரணையில் அவர் பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களுடன் மினி வேனில் வந்ததாகவும் திருநெல்வேலி அருகே வரும்பொழுது தான் ஓட்டி வந்த வாகனத்தை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி கொண்டு வந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறை வைத்ததாகவும் கூறினார். மேலும், மினி வேனில் இருந்த பொருட்களை பதுக்கி வைத்துவிட்டு வேனை விடுவிக்க உரிமையாளரிடம் 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் கூறிய அவர், அவர்கள் அசந்த நேரம் பார்த்து அவர்களிடமிருந்து தப்பித்து வெளியே வந்ததாகவும் தெரிவித்தார்.

 


 

இதனைத்தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் விடுதிக்கு சென்று அங்கு தங்கியிருந்த 4 பேரையும் மடக்கி பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்துள்ளனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஓசூரில் இருந்து நான்கு சக்கர வாகனத்தில் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டதை அறிந்த இந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்த வாகனத்தையும், வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரையும் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்தி வந்ததாகவும், பின்னர் குட்கா பொருட்களுக்கு சொந்தமானவரிடம் 20 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

இதனையடுத்து போலீசார் குட்கா பொருட்கள் கடத்தி வந்த வாகனத்தையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மினி வேன் டிரைவர் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் என 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.