தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூன் 10 ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை (ஜூன் 14) நடைபெறும் இந்த போட்டியில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
உலக தடகளம் மற்றும் காமன்வெல்த் போட்டிக்கு தகுதிச்சுற்று போட்டியாக அமைந்துள்ள இந்த போட்டித் தொடரில் முதல் நாள் நடந்த போட்டிகளில் பெண்களுக்கான போல்வால்ட் எனப்படும் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனையான மயிலாடுதுறையைச் சேர்ந்த பரனிகா 4.05 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதேபோல மற்றொரு தமிழக வீராங்கனைகள் ரோசி மீனா (4 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், பவித்ரா (3.90 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
2வது நாளில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கே.இலக்கிய தாசன் (10.48 வினாடி) வெள்ளிப்பதக்கமும், ஆண்களுக்கான போல்வால்ட்டில் தமிழக வீரர்கள் சிவா 5 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், ஞான சோனி 4.60 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கமும் வென்றனர். டக்கத்லானில் தமிழக வீரர் ஸ்ரீது 6,657 புள்ளிகளோடு வெண்கலப்பதக்கமும், நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் சுவாமிநாதன் (7.89 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.
400 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்றார். இந்நிலையில் 3வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி.கனிமொழி இலக்கை 13.62 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதேபோட்டியில் மற்றொரு தமிழக வீராங்கனை தபிதா (14.09 வினாடி) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அதேசமயம் ஆண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சுரேந்தர் 14.18 வினாடியில் இலக்கை எட்டி வெள்ளிப்பதக்கமும், உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் பாரதி விஸ்வநாதன் வெண்கலப்பதக்கமும் வென்று அசத்தினர். இன்னும் 2 நாட்கள் போட்டிகள் மீதமுள்ள நிலையில் தமிழக வீரர்கள் மேலும் பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்