பணம் எல்லாம் தண்ணிபட்ட பாடு என்பார்கள். ஆனால், சம்பாதிப்பதும், அதற்காக சங்கடங்களை அனுபவிப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும், பணம், எவ்வளவு தூரத்தில் இருக்கிறது; அதை துரத்த, என்னப்பாடு படுகிறோம் என்பதை! இங்கு பணம் இல்லாமல் எதுவும் இல்லை. இல்லாததையும் உருவாக்கும் பலம் பணத்திற்கு உண்டு. அதனால் தான், மனத்தை விட பணத்திற்கு மனிதம் முக்கியத்துவம் தருகிறார்கள்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆனால், அந்த 10 ரூபாயை பெற இன்னும் இங்கே பலர் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒருவர் தனக்கு கிடைத்த பணத்தை என்னவெல்லாம் செய்வார்? சேமிப்பார், முதலீடு செய்வார், வீட்டில் வைப்பார், ஏன்... தானம், தர்மம் கூட செய்வார். இங்கே ஒருவர், தனக்கு தேவைக்கு அதிகமாக பணம் வரும் போது, அவர் செய்யும் சேஷ்டைகளுக்கு அளவே இல்லை.
ஆம், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுஷில் குண்டு என்பவர், நல்ல பணப்புழக்கம் கொண்ட நபர். கோல்டு பாய் என்று அழைக்கப்படும் இவர், கழுத்து நிறைய தங்க சங்கிலியால் நடமாடும் நகைக்கடையாக வலம் வருபவர். நம்மூர் ஹரி நாடார், வரிச்சூர் செல்வம் மாதிரி என வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. எப்போதுமே இவரது இன்ஸ்ட்டா பக்கம் , கொஞ்சம் காரசாரமாக இருக்கும். கையில் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு, கேங்ஸ்டர் போல வலம் வருவது, நகைகள் அணிந்து, கேட் வாக் போவது என இவர் செய்யும் வேலைகள் படுபயங்கரம்.
இவருக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் என நினைக்கிறேன். கட்டுக்கட்டாக குவியும் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், தனது படுக்கையில் 500 ரூபாய், 2000 ரூபாய் கட்டுகளை அடுக்கி; அடுக்கி என்று கூட சொல்ல முடியாது.... வீசி, படுக்கை முழுவதும் பணமாக மாற்றி, அதில் உறங்கும் பழக்கத்தை தொடங்கியுள்ளார். அவனவன், ஐநூறு ரூபாய் சம்பாதிக்க நாயாய் உழைத்துக் கொண்டிருக்கிறார். நோகாமல், இவர்கள் சம்பாதித்து. இது போன்ற வீடியோக்களை போட்டு, எளியோரை எரிச்சலடையச் செய்கின்றனர். நேர்மையாக வரும் பணத்தை யாரும் இப்படி அலட்சியப்படுத்த மாட்டார்கள். எது எப்படி இருந்தாலும், இது கொஞ்சம் ஓவர் தான்.