சாத்தனூர் அருகே மர்மமான முறையில் இறந்த இங்கிலாந்து பெண்; உடல் தோண்டி பிரேத பரிசோதனை

சாத்தனூர் அருகே வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த 73 வயது வெளிநாட்டு பெண்மணி மர்மமான முறையில் உயிரிழப்பு. அவரின் உடல் தோண்டி 2 மணிநேரம் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

Continues below advertisement

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்காவடி கிராமத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி அங்கு பண்ணை வீடு கட்டி அதில் வசித்து வந்துள்ளார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய நாட்டை  சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அப்போது அந்த வீட்டை ஏற்கனவே திருவண்ணாமலையில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு சென்றுள்ளனர். அந்த பெண் தனிமையில் பண்ணை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை அங்கிருப்பவர்கள் மீனாட்சியம்மாள் என அழைப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் மீனாட்சியம்மாளை திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்கு சென்று பார்த்து அவருக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி வழக்கம்போல் ஹரி பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மீனாட்சியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

Continues below advertisement


 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி உயிரிழப்பு சடலம் புதைத்த இடத்தை போலீசார் ஆய்வு

பின்னர், ஹரி மற்றும் கிராமத்தினர் மீனாட்சியம்மாள் உடலை சடங்குகள் செய்து அதே பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர். இந்நிலையில் ஹரி, இறந்த மீனாட்சியம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாளிடம் மனு கொடுத்துள்ளார். பின்னர், மனு மீது விசாரணை செய்த கிராம நிர்வாக அலுவலர் இறந்த பெண் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் சந்தேகமடைந்து இதுகுறித்து சாத்தனூர் அணை காவல் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர், தாசில்தார் அப்துல், ரகூப் மண்டல துணை தாசில்தார் மோகன ராமன், துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வெற்றிவேல், வருவாய் ஆய்வாளர் சத்திய நாராயணன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் பண்ணை வீட்டிற்கு சென்று மீனாட்சியம்மாள் சடலம் புதைத்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


 

பின்னர், இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், 'உயிரிழந்து புதைக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது சகோதரியின் இறப்பில் மர்மம் உள்ளதாக புகார் அளித்ததின் பெயரில் நேற்று மாவட்ட கூடுதல் கண்கானிப்பாளர் பழனி வட்டாட்சியர் தலைமையில் உடலை தோண்டி இந்த பிரேத பரிசோதனையை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. 3.30 மணிக்கு தொடங்கிய இந்த பரிசோதனை 5.30 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது” என்றனர். இந்த பிரேத பரிசோதனையை காண்பதற்கு ஏராளமான மருத்துவக் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் குவிந்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்து அதே இடத்தில் சடலம் புதைக்கப்பட்டது. மேலும் சில முக்கிய உடல் கூறுகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  பெண்ணை புதைப்பதற்கு உதவிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் ஹரியிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola