மயிலாடுதுறை மாவட்டத்தில் தூர்வாரும் பணியின் போது 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏராளமான பனை மரங்களை வேருடன் பிடிங்கி எறிந்த சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை லஸ்கர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவிரி கடைமடை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி கடைமடை பகுதியாகும். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக மக்கள் செய்து வருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். சில சமயங்களில் நீர் மாற்றம் குறைவு காரணமாக மேட்டூர் ஜூன் 12-ம் தேதி அன்று திறக்காமல் காலதாமதமாகவும் தண்ணீர் திறக்கப்படுவதும் உண்டு. 

வாய்க்கால்களின் பயன்பாடுகள் 

இந்நிலையில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் விவசாய பயன்பாட்டிற்கு தங்கு தடையின்றி சென்றடைய ஆண்டுதோறும் தமிழக அரசு குடி மராமத்து பணி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவு செய்து வாய்க்கால்களை தூர்வாரி வருகிறது. வாய்க்கால் தூர் வருவது மூலம் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் விலை நிலங்களுக்கு எளிதாக சென்றடைவது மட்டுமின்றி, மழை வெள்ள காலங்களில் அது வடிகால் வாய்க்கால் ஆகவும் செயல்படுகிறது.

பிடிங்கி எறியப்பட்ட பனைமரங்கள் 

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மணிகிராமம் பகுதியில் பெரிய வாய்க்கால் கரைகளை சீரமைத்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளின் போது வாய்க்கால் கரைகளில் இருந்த ஏராளமான 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பனை மரங்களை பொக்களை இயந்திரம் உதவியுடன் வேருடன் பிடுங்கி வெட்டி தள்ளி சாய்த்துள்ளனர். 

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

இதுகுறித்தான வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி கடும் கண்டனம் எழுந்து வருகிறது. பனை மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், அரசு ஒப்பந்த பணியில் எந்தவித அனுமதியும் பெறாமல் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதற்கு விவசாயிகளும், பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிகிராம கிராம நிர்வாக அலுவலர் சார்பில் திருவெண்காடு காவல் நிலையத்தில் நீர்வள ஆதாரத்துறை லஸ்கர் எனப்படும் கரை பாதுகாவலர் மீதும், வாய்க்கால் தூர் வாரிய ஒப்பந்தக்காரர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சமூக ஆர்வலர்கள் கண்டனம்

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தினை பாதுகாக்கவும், அதனை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று வெட்ட வேண்டும் என்றும், பல இடங்களில் சமூக ஆர்வலர்கள் பண விதைகளை நட்டு பனை மரங்களை அழிவிலிருந்து காத்து வரும் இந்த வேளையில், செங்கல் தயாரிக்கும் கால்வாய்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்று பண மரங்களை வெட்டி சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.