(Source: ECI/ABP News/ABP Majha)
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி வங்கி, போலி ரூபாய் நோட்டுகள் வரிசையில் குஜராத்தில், போலி நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fake Court: குஜராத்தில் போலி நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த நபர் சிக்கியது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
போலி நீதிமன்றம் அமைத்து மோசடி:
போலி அரசு அலுவலகங்கள், போலி சுங்கச்சாவடிகள் வரிசையில், ஒரு நபர் ஒரு போலி நீதிமன்றத்தை நிறுவி மோசடி செய்த சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது. அந்த நபர் தன்னை நீதிபதியாக அடையாளப்படுத்தி பல உத்தரவுகளையும் பிறப்பித்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன், கடந்த 2019-ம் ஆண்டு அரசு நிலம் தொடர்பான வழக்கில், தனது கட்சிக்காரருக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்ததால், கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றம் செயல்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் இந்த போலி நீதிமன்றம் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. கிறிஸ்டியன் தன்னை நடுவர் மன்றத்தின் நீதிபதியாகக் காட்டி மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றத்தால் நடுவராக நியமிக்கப்பட்டதாகக் கூறி சாதகமான உத்தரவுகளைப் பிறப்பித்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நீதிமன்றம் எவ்வாறு செயல்பட்டது?
முதற்கட்ட விசாரணையில், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை, கிறிஸ்டியன் தனது வலையில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார். அவர்களிடம் முதலில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடுவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். பிறகு காந்திநகரில் நீதிமன்றத்தைப் போல வடிவமைக்கப்பட்டு உள்ள தனது அலுவலகத்திற்கு வாடிக்கையாளர்களை அழைத்து, தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக சாதகமான உத்தரவை வழங்கி வந்துள்ளார். இதற்காக வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தீர்ப்பதற்காக தனது கட்டணமாக வாங்கியுள்ளார். அவரது கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவோ அல்லது வழக்கறிஞர்களாகவோ நின்று வழக்குகள் உண்மையானவை என்ற தோற்றத்தை உருவாக்க வந்துள்ளனர்.
சிக்கியது எப்படி?
கடந்த 2019 ஆம் ஆண்டில், மேற்குறிப்பிட்ட பாணியை பின்பற்றி கிறிஸ்டியன் தனது வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு, மாவட்ட ஆட்சியரின் கீழ் உள்ள அரசு நிலம் தொடர்பான வழக்கு. பால்டி பகுதியில் உள்ள அந்த நிலம் தொடர்பான வருவாய்ப் பதிவேடுகளில், தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என கூறியவருக்கு ஆதரவாக கிறிஸ்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்பிறகு அவர் தனது 'நீதிமன்றத்தில்' போலி வழக்குகளைத் தொடங்கி, தனது வாடிக்கையாளருக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அந்த நிலத்தின் வருவாய் பதிவேடுகளில் தனது வாடிக்கையாளரின் பெயரைச் சேர்க்க கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை அமல்படுத்த, கிறிஸ்டியன் மற்றொரு வழக்கறிஞர் மூலம், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர் பிறப்பித்த அந்த மோசடி உத்தரவை இணைத்தார். இந்நிலையில் தான், நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய், கிறிஸ்டியன் நடுவர் இல்லை அல்லது தீர்ப்பாயத்தின் உத்தரவு உண்மையானது அல்ல என்பதை சமீபத்தில் கண்டுபிடித்தார்.
போலி நீதிபதி கைது:
நீதிமன்ற பதிவாளரின் புகாரின் பேரில், கரஞ்ச் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். இவர் ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு மணிநகர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) அதிகாரப்பூர்வ சுங்கச்சாவடியில் இருந்து 600 மீட்டர் தொலைவில் தனியார் நிலத்தில் கட்டப்பட்ட போலி சுங்கச்சாவடி கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதோடு, அண்மையில் அனுபம் கெர் புகைப்படம் கொண்டு அச்சிடப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் குஜராத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.