Crime: இளம்பெண் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்.. குற்றவாளிக்கு நேர்ந்த கதி..
ராஜஸ்தானில் சகோதரருடன் இளம்பெண் சென்றுக்கொண்டிருக்கும் போது 3 பேர் கொண்ட கும்பல் கொடூர தாக்குதலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் கொத்புத்லி-பெஹ்ரார் மாவட்டத்தில் பிரக்புரா கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராஜேந்திர யாதவ் என்ற முக்கிய குற்றவாளி இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் அவரது கூட்டாளிகளான மஹிபால் குஜ்ரால் மற்றும் ராகுல் குஜ்ரால் ஆகிய இருவரும் கோடாரியால் கடுமையாக அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். அவரது சகோதரர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோடாரியால் தாக்கியதில் இளம்பெண்ணுக்கு தலை, கால், கை தோள் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பின் 3 பேரும் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து 20 அடி தூரத்தில் நடந்துள்ளது. தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகார் அளிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மஹிபால் குஜ்ரால் மற்றும் ராகுல் குஜ்ரால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் ராஜேந்திரா யாதவ் படுகாயங்களுடன் ஜெயப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரியவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கினாரா? தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா ? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் ரயில் முன் விழுந்திருக்கலாம் என்றும் அதில் அவர் ஒரு கால் இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ராஜேந்திராவுக்கு எதிராக தாக்குதலுக்கு உள்ளான இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் செய்து வந்த வேலையும் இழக்க நேரிட்டது. இதற்கிடையில் சமீபத்தில் அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்ததும் அந்த புகாரை வாபஸ் வாங்கும்படி இளம்பெண்ணிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இளம்பெண் சகோதரருடன் சென்றுக் கொண்டிருக்கும் போது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.