Chennai airport Smuggling: அயன் சூர்யா பாணியில் தங்கம் கடத்திய 62 வயது முதியவர் கைது
துபாயிலிருந்து சென்னை வந்த சிறப்பு விமானத்தில் நோயாளிபோல் நடித்து அயன் பட சூரியா பாணியில் தங்கம் கடத்திய 62 வயது முதியவர் அபுபக்கரை சுங்கவரித்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்
சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு இன்று காலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்ட போது சந்தேகம் அளிக்கும் வகையில் 62 வயது கொண்ட முதியவர் தன்னை நோயாளி என்று கூறி விமான நிலைய ஊழியரை கொண்டு சக்கர நாற்காலி மூலம் வெளியே வந்தார்.
சுங்கச்சோதனை பிரிவில் சக்கரநாற்காலி பயணியை நிறுத்தி சோதனையிடாமல் அனுப்பி விடுவது வழக்கமாக இருக்கும் நிலையில் விமானநிலைய ஊழியா் கிரீன் சேனல் வழியாக சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு சென்றாா். ஆனால் சுங்கத்துறையினருக்கு சக்கர நாற்காலியில் சென்ற பயணி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வரவழைத்து சோதனையிட முயன்றனர். ஆனால் அந்த நபர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒத்துழைப்பு தராமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை சோதனை செய்ததில் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து இரண்டு தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் அந்த நபரிடம் தொடர்ந்து விசாரித்ததில் அவர் சென்னையை சேர்ந்த அபுபக்கர் என்பதும், நோயாளி போல் நடித்து அவர் மறைத்து எடுத்து வந்த தங்கட்டியின் எடை 465 கிராம் என்பதும் அதன் மதிப்பு 20 லட்சம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அபுபக்கரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளிடம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 4ஆவது முறையாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் பிடிப்பட்டுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி தோஹாவில் இருந்து கால் உறையில் மறைத்து எடுத்து வரப்பட்ட 7.14 லட்சம் மதிப்புள்ள 140 கிராம் தங்கமும், கடந்த 10ஆம் தேதி ஜீன்ஸ் பேண்டின் இடுப்பு பகுதியில் மறைத்து எடுத்து வரப்பட்ட 63.20 லட்சம் மதிப்புள்ள 1230 கிராம் தங்கமும், கடந்த ஜூன் 16ஆம் தேதி துபாயில் இருந்து பழச்சாறு பிழியும் இயந்திரத்தில் மறைத்து எடுத்துவரப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கமும் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோஹேனேஸ்பர்க் நகரில் இருந்து கத்தார் நாட்டின் தோஹா வழியாக சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 2 பெண் பணிகளிடம் சோதனை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள் 70 லட்சம் மதிப்புடைய 9.87 கிலோ எடை கொண்ட ஹெராயினையும் கைப்பற்றி இருந்தனர். சமீப காலமாக சென்னை விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றுவது அதிகமாகி வருகிறது