Renault Triber: நாட்டின் மலிவான 7 சீட்டரில் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை இறக்கிய ரெனால்ட் - விலை, மைலேஜ் விவரங்கள்
Renault Triber Turbo Petrol: நாட்டின் மலிவான 7 சீட்டர் கார் மாடலான ட்ரைபரில், செயல்திறனுக்கான டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Renault Triber Turbo Petrol: ரெனால்ட் ட்ரைபர் டர்போ பெட்ரோல் இன்ஜின் எடிஷனின் விலை ரூ.7.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் டர்போ பெட்ரோல் எடிஷன் விலை:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரெனால்ட் ட்ரைபர் டர்போ எடிஷன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை வரம்பானது ரூ.84 லட்சத்தில் தொடங்கி ரூ.8.99 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது டர்போ எடிஷனின் விலையானது நேட்சுரலி ஆஸ்பிரேடட் வேரியண்டை காட்டிலும் 94 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.1.11 லட்சம் வரை கூடுதல் விலையை கொண்டுள்ளது. இந்த காரின் ஒட்டுமொத்த விலை வரம்பானது ரூ.5.81 லட்சத்தில் தொடங்கி ரூ.10.40 லட்சம் வரை நீள்கிறது. முன்னதாக கடந்த 2019ம் ஆண்டிலேயே சக்திவாய்ந்த டர்போ எம்பிவி எடிஷனில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியான நிலையில், தாமதமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
ரெனால்ட் ட்ரைபர் டர்போ பெட்ரோல் - விலை விவரங்கள்
| வேரியண்ட் | மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் விலை | ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் விலை |
| அதெண்டிக் | ரூ.5.80 லட்சம் | - |
| எவல்யூசன் | ரூ.6.73 லட்சம் | - |
| எவல்யூசன் டர்போ (புதியது) | ரூ.7.84 லட்சம் | - |
| டெக்னோ | ரூ.7.44 லட்சம் | - |
| டெக்னோ டர்போ (புதியது) | ரூ.8.53 லட்சம் | - |
| எமோஷன் | ரூ.8.05 லட்சம் | ரூ.8.52 லட்சம் |
| எமோஷன் டர்போ (புதியது) | ரூ.8.99 லட்சம் | - |
ரெனால்ட் ட்ரைபர் டர்போ பெட்ரோல் - இன்ஜின் விவரங்கள்
கைகர் மற்றும் டஸ்டர் 1.0 எஸ்யுவிகளில் உள்ள அதே 'HR10' 1.0-லிட்டர் 3 சிலிண்டர் இன்ஜின் தான் ட்ரைபர் டர்போவிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மேனேஜ்மென்ட் சிஸ்டம் காரணமாக, முந்தைய இரண்டு எஸ்யுவிகளையும் விட அதிகமாக 180Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், இதன் உச்சபட்ச பவர் அவுட்புட் அதே 100hp ஆக உள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை 10.8 விநாடிகளில் எட்டும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு, ட்ரைபர் டர்போ 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது, இருப்பினும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விரைவில் வரவிருக்கிறது. இது லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரைபர் டர்போ பெட்ரோல் - டிசைன் சிறப்பம்சங்கள்
ட்ரைபர் டர்போவை அதன் வழக்கமான மாடலிலிருந்து வேறுபடுத்தும் வகையில் வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. முன்பக்கத்தில் ப்ராண்டின் புதிய லோகோவுடன் கூடிய பளபளப்பான கருப்பு நிற க்ரில் மற்றும் பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் (DRLs) கூடிய எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளன. கீழ்ப்பகுதியில், பம்பரில் சில்வர் நிறச் சுற்றுடன் கூடிய ஒரு பெரிய ஏர் டேம் மற்றும் அதன் வெளி விளிம்புகளில் ஃபாக் லேம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பக்கவாட்டுத் தோற்றத்தில், அலாய் வீல்கள் போல் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரட்டை வண்ண உறைகளைக் கொண்ட 15 இன்ச் சக்கரங்களும், செயல்பாட்டுக்கு உகந்த ரூஃப் ரெயில்களும் உள்ளன. கதவுக் கைப்பிடிகள் மற்றும் வெளிப்புறப் பின்புறக் கண்ணாடிகள் (ORVMs) பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளன. பின்புறத்தில், தெளிவான லென்ஸ் கொண்ட LED டெயில்-லேம்ப்கள் பளபளப்பான கருப்பு ட்ரிம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. டெயில்கேட்டில் ஒரு புதிய 'TURBO' பேட்ஜ் உள்ளது. இது பெட்ரோல் எடிஷனிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.
அம்சங்கள், வசதிகள்:
7 சீட்டர் MPV-யில் அம்சங்களின் பட்டியல் அப்படியே தொடர்கிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியுடன் கூடிய 8-இன்ச் தொடுதிரை மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புறத்திற்கான தனி ப்ளோவர் கன்ட்ரோலுடன் கூடிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், குளிரூட்டப்பட்ட சென்டர் ஸ்டோரேஜ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள், பின்புற வாஷர்/வைப்பர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்றவையும் உள்ளன. ரெனால்ட் நிறுவனத்தின்படி, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடிக்கும்போது பூட் ஸ்பேஸ் 625 லிட்டராக உள்ளது.
பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் மவுண்ட்கள், ஏபிஎஸ், ஈபிடி, ஈஎஸ்பி, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், டயர்-ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என பல அடங்கும். ரெனால்ட் நிறுவனம் டர்போ மாடலுக்காக ஏபிஎஸ், ஈஎஸ்சி மற்றும் ட்ராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவற்றை பிரத்யேகமாக மறுசீரமைத்துள்ளது. இதற்கு முன்னர், ட்ரைபர் சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















