ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ரேஞ்ச் ரோவர் இ.வி. விற்பனைக்கு வரும்போது மெர்சிடிஸ் பென்ஸ் EQS, பிஎம்டபிள்யூ iX மற்றும் வால்வோ EX90 ஆகிய ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு இது நேரடிப் போட்டியாக அமையும்.

ஆடம்பர எஸ்யூவி கார்களுக்குப் பெயர் பெற்ற ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் காரை உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான புக்கிங் இந்தியாவிலும் தற்போது தொடங்கியுள்ளது. இது ரேஞ்ச் ரோவர் குடும்பத்தின் முதன்மை மாடலாகக் களமிறங்குகிறது.
பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்
800 வோல்ட் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த காரில் 118.5 kWh டபுள் ஸ்டாக்டு பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 கி.மீ ரேஞ்ச் தரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 350kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீத பேட்டரியை வெறும் 22 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும், 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 220 கி.மீ தூரம் வரை பயணிக்கும் வசதியும் இதில் உள்ளது.
செயல்திறன் எப்படி?
இதில் இரண்டு பெர்மனென்ட் மேக்னெட் எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 543 bhp பவரையும், ரேஞ்ச் ரோவர் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 850 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன. இன்ஜின் சத்தம், அதிர்வுகள் இன்றி அமைதியான பயணத்தையும் சிறப்பான ஆக்சிலரேஷனையும் இது வழங்கும்.
ஆஃப் ரோடு வசதிகள்
ஆடம்பரம் மட்டுமின்றி, ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்கும் ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள புதிய ஒருங்கிணைந்த டிராக்ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மற்றும் சிங்கிள் பெடல் டிரைவிங் மோட் ஆகியவை சாலை நிலைகளுக்கு ஏற்ப விரைவாகச் செயல்படும். இது 45 டிகிரி செங்குத்தான சரிவுகளில் ஏறும் திறனும், 900 மி.மீ ஆழமுள்ள நீரில் தடையின்றிச் செல்லும் திறனும் கொண்டது.
வேரியண்ட்கள் மற்றும் வடிவமைப்பு
இந்த எலெக்ட்ரிக் கார் ஸ்டாண்டர்ட்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராஃபி, லாங்-வீல்பேஸ் SV, SV அல்ட்ரா மற்றும் SV பிளாக் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும், பெல்கிரேவியா கிரீன், சான்டோரினி பிளாக் மற்றும் வரேசின் ப்ளூ ஆகிய பிரத்யேக நிறங்களில் மாறுபட்ட இன்டீரியர் வேலைப்பாடுகளுடன் 'ஃபர்ஸ்ட் எடிஷன்' (First Edition) மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.
விலை மற்றும் போட்டி
இந்தியாவில் இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விற்பனைக்கு வரும்போது மெர்சிடிஸ் பென்ஸ் EQS, பிஎம்டபிள்யூ iX மற்றும் வால்வோ EX90 ஆகிய ஆடம்பர எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு இது நேரடிப் போட்டியாக அமையும். எலெக்ட்ரிக் வாகன யுகத்தில் ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் மிகப்பெரிய முன்னெடுப்பாக இந்த கார் பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















